பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா
பாகிஸ்தானின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும், நிவாரணப் பொருள்களை அளிப்பதிலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்கள் ஈடுபடுவது கவலையளிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பில் பர்டன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு மீட்புக் குழுவினர் செல்வதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா இயக்கத்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதைப் பார்க்க முடிந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிப்பதில் அரசு முனைப்புடனும், வேகமாகவும் செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இப்போது ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் பாகிஸ்தானுக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் மீட்பு நடவடிக்கைகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணி என்ற போர்வையில் பயங்கரவாதிகள் ஊடுருவினாலும், பாகிஸ்தானுடனானஅமெரிக்க உறவு மிகவும் பெரியது என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் ஜனநாயக நடைமுறையை சிதைக்க ஏதேனும் ஒரு சக்தி தினசரி உருவாகிறது. தற்போது இதை சாக்கிட்டு பயங்கரவாதிகள் நாட்டினுள் புகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் பர்டன்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிவாரண உதவிகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. பாகிஸ்தான் கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகை முழுவதும் கிடைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பில் பர்டன் தெரிவித்தார்.
ஒபாமா நிர்வாகம் வெள்ள நிவாரண உதவியாக 5.5 கோடி டாலர் நிதியை அளிக்க முன்வந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க மக்களின் நன்மதிப்பைப் பெறவும் அமெரிக்கா முயன்றுள்ளது. இதிலிருந்து நீண்ட கால அடிப்படையில் பாகிஸ்தானின் நல விரும்பியாக அமெரிக்க உள்ளது என்பதை உணர்த்துவதற்காக உதவித் தொகைகள் தாராளமாக அளிக்கப்பட்டுள்ளது என்று பர்டன் தெரிவித்தார்.
வெள்ளம் சூழ்ந்த ஸ்வாட், கலாம் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் அமெரிக்க மீட்புக் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேவையான உதவிகளைச் செய்யுமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் ஜேம்ஸ் ஜோன்சுக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment