இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்கு மகிந்த அனுமதி. பதவி பதக்கங்களை இழக்கிறார் பொன்சேகா.
ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு சிவில் மற்றும் இராணுவ நீதிமன்றுகளில் பல்வேறு வழக்குகளுக்கு முகம்கொடுத்துவரும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா மீதான முதலாவது இராணுவ குற்றவியல் நீதிமன்றின் தீர்ப்பினை நிறைவேற்ற நாட்டின் ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் பொன்சேகா சேவையில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டார் என இராணுவ குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டவழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுக்களும் நிருபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்த இராணுவ நீதிபதிகள் , ஜெனரல் பொன்சேவிற்கு வழங்கபட்டுள்ள சகல் பதக்கங்கள் பதவிகளையும் களையுமாறு பரிந்துரைத்திருந்தனர். இப்பரிந்துரையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கி கையொப்பம் இட்டுள்ளார்.
அத்துடன் இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் முழுமையாக வெளிவரவில்லை , இக்குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. இது தொடர்பாக கருத்துரைதுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலர் பொன்சேகாவிற்கு இக்குற்றத்திற்கு அதி உச்ச தண்டனை வழங்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஜெனரல் பொன்சேகாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி தீர்ப்பானது ஒருதலைபட்சமானது என்றும், அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், ஜனநாயக தேசிய முன்னணியும் அறிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பைத் தாம் ஏற்கப்போவதில்லை என்றும், இத்தீர்ப்புக்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறுவதென்பது 'நகைச்சுவையானது' என்றும் பொன்சேகா கருத்துத் தெரிவித்துள்ளதாக அவரது மனைவி அனோமா பொன்சேகா கூறினார்.
தமக்கு நான்கு கீழ் நிலை இராணுவ அதிகாரிகள் தீர்ப்பு வழங்கியுள்ளமையானது வேடிக்கையாக உள்ளது. இத்தீர்ப்பை ஒருவருமே ஏற்கப்போவதில்லை என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment