அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியா சென்றுள்ள நிலையில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவும் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையத்தின் இயக்குனர் குலுகல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகள் குழுவொன்று இந்தியா செல்லவுள்ளதாக செய்திகள் பரவியிருந்த நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னந்தனியாக டெல்லி வந்தடைந்தாக இந்திய செய்திகள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலரும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் தங்கியுள்ள அமைச்சர் பசில் ராஜபக்ச இந்திய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் குமாரி செல்ஜாவை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்.
பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கை வடக்கு மாகாணங்களில் முற்றிலும் மீள்குடியமர்த்தம் பணிகள் நிறைவடைந்து விட்டது. தற்போது முகாம்களில் 10 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் டிசம்பவர் மாதத்திற்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழர்களின் மீள்குடியேற்றம் செய்த இடங்களில் இந்திய அரசு 500 கோடி ரூபாய் செலவில், 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தர உள்ளது. இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்தியா இலங்கை இடையேயான சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்திய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கவே டெல்லி வந்துள்ளேன் என்றார்.
அதேநேரம் இந்தியா புறப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலர் , இடைத்தங்கல் முகாம் மக்களின் மீள்குழயேற்றம் தொடர்பாக பேசுவதற்காகவே சென்றுள்ளார் என குலுகல்ல தெரிவித்துள்ளார்.
இடைத்தங்கல் முகாம் மக்களின் விவகாரங்கள் தொடர்பாக பார்வையிடுவதற்கு இந்தியாவிலிருந்து ஓர் குழு செல்லவுள்ளது என இந்திய அரசியல் வட்டாரங்களிலிருந்து வெளிவந்த தகவல்களில் முன்னுக்குபின் முரணான கருத்துக்கள் நிலவி வருகின்றது. இந்திய அதிகாரிகள் செல்வதால் எந்த மாற்றத்தையும் இலங்கையில் ஏற்படுத்தி விடமுடியாது என இந்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment