Tuesday, August 10, 2010

மாஸ்கோவில் பனியும் புகையும்.

ரஷ்யாவில் நிலவும் கடும் வறட்சி, வீசும் அனல் காற்று இவற்றின் காரணமாக பல இடங்களில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. மத்திய ரஷ்யாவிலிருந்து தென் பகுதி வரை காட்டுத் தீ பரவி வரும் வேளையில் தலைநகர் மாஸ்கோவில் தூசி மூட்டத்துடன் கூடிய பனியும் புகையும் சூழ்ந்துள்ளன. இதனால் இங்குள்ள மக்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் தொண்டை வலி, கண் எரிச்சல் போன்ற பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக ரஷ்யத் தகவல்கள் கூறின. இன்னும் சிலர் சுவாசப் பிரச்சினைக்கு ஆளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய மோசமான புகை மூட்டம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் மாஸ்கோவில் வசிக்கும் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வீடுகளிலேயே தங்கியிருப்பது நல்லது என்றும் ரஷ்ய சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புகை மூட்டம் காரணமாக காற்றில் ஆபத்தான நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதால் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகை மூட்டத்தின் பாதிப்பைத் தவிர்க்க அங்கு வசிக்கும் மக்களும் சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பு முக மூடிகளை அணிந்து வருகின்றனர்.

மத்திய ரஷ்யாவில் இன்னும் 600 இடங்களில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிவதாகக் கூறப்படுகிறது. காட்டுத் தீக்கு இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர். காட்டுத் தீயை அணைக்க ரஷ்ய தீயணைப்பாளர்கள் மற்ற நாடுகளின் தீயணைப்பாளர்களுடன் சேர்ந்து போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆயிரக்கணக்கான தீயணைப்பாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில நாடுகள் தீயணைப்பு வண்டிகளையும் ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளன.

ரஷ்யாவில் வீசும் அனல் காற்றின் வேகம் தணியவில்லை என்றும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையில் காட்டுத் தீ, மாஸ்கோ அருகே உள்ள ஆயுதக் கிடங்கிற்கு பரவக்கூடும் என்ற அச்சத்தால் அங்குள்ள ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்றும்படி அதிகாரிகளுக்கு தற்காப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

மாஸ்கோவில் காணப்படும் தற்போதைய மோசமான புகை மூட்டம் காரணமாக அங்கு செல்லும் விமானங்கள் திசை திருப்பி விடப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment