Saturday, August 28, 2010

விமானநிலையத்தில் விசா வழக்குவதை நிறுத்தும் திட்டம் கைவிடப்பட்டது.

இலங்கைக்கு உல்லாச் பிரயாணிகளாக வரும் 70 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு, விமான நிலையத்தில் விசா வழக்கும் வசதியை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருந்தபோதும் அத்திட்டத்தினை இறுதி நேரத்தில் கைவிட்டுள்ளது. புதிய வீசா நடைமுறை தொடர்பாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்திருந்த அறிக்கையில், இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் வசதி நிறுத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதல் இந்த வசதி நிறுத்தப்படும். அதே நேரத்தில் சிங்கப்பூர் மற்றும் மாலத் தீவுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு மட்டுமே இந்த வசதி தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியர்கள் உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு இந்த வசதி இனி வழங்கப்படமாட்டாது. அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலமோ அல்லது இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரிடமோ விண்ணப்பித்து விசா பெற்றுத் தான் இலங்கைக்குள் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே, 30 நாட்களுக்கு விசா வழங்கும் திட்டம், கடந்த 1970ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை பிற்போட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்திட்டம் நடைமுறைக்கு வருமானால் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் சுமார் 15 லட்சம் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுடாக வீசாவினை பெற்றே தமது தாய்நாட்டுக்கு செல்ல வேண்டிவரும்.

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 'விசா' வழங்கும் நடைமுறையை நீக்க வேண்டும் என்ற யோசனையை கடந்தவருடம் 10ம் மாதமளவில் பாதுகாப்பு அமைச்சு முன்வைத்திருந்தது. இலங்கையினுள் உல்லாச பயணிகள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் நுழைவதாகவே அமைச்சு இவ்யோசனையை தெரிவித்திருந்தது.

அக்கால கட்டத்தில் சுமார் 309 வெளிநாட்டவர்கள் வேறு நோக்கங்களுக்காக வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

இதேவேளை, இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்களை புகைப்படும் எடுக்கும் திட்டமொன்றை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர். உல்லாசப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டிற்குள் உட்பிரவேசிக்கும் நபர்கள் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அவர்களை அடையாளம் காண்பதற்காக புகைப்படங்கள் எடுக்க திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.


No comments:

Post a Comment