Thursday, August 5, 2010

மேர்வின் சில்வாவின் கொடும்பாவி அவரது பிறந்த ஊரில் எரிப்பு. ஜேவிபி மீது குற்றச்சாட்டு.

சமுர்த்தி உத்தியோகித்தர் ஒருவரை அமைச்சர் மேர்வின் சில்வா கட்டிவைத்தமையை கண்டித்து சமுர்த்தி ஊழியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவ்வார்ப்பாட்டங்களின் ஒரு கட்டமாக மேர்வின் சில்வாவின் சொந்த ஊரான பெலியத்தவில் அவரது கொடும்பாவி ஆர்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று பாராளுமன்றில் பலத்த கேள்விகள் எழுப்பப்பட்டன. இவ்விடயத்தினை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடினார். நபரொருவருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மேர்வின் சில்வாவிற்கு யார் வழங்கினர் என்ற கேள்வியும் பாராளுமன்றில் எழுப்பப்பட்டிருந்தது.

இக்கேள்விகளுக்கு பதிலளித்த மேர்வின் சில்வா தான் எவரையும் மரத்தில் கட்டி வைக்கவில்லை எனவும் , குறிப்பிட்ட சமுர்த்தி ஊழியரே தன்னை சுயமாக மரத்தில் கட்டிக்கொண்டதாவும் தான் அவரை மரத்திலிருந்து அவிட்டு விட்டாகவும் தெரிவித்த அமைச்சர் சமுர்த்தி ஊழியர் தான் சுயமாக மரத்தில் தன்னை கட்டிக்கொண்டதாக அவர் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினையும் மன்றில் காண்பித்தார்.

குறிப்பிட்ட ஊழியரை மரத்தில் கட்டுங்கள் என மேர்வின் சில்வா தனது அடியாட்களுக்கு கட்டளையிடும் வீடியோ பதிவுகள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில் மேர்வின் இப்பதிலினை பாராளுமன்றில் அளித்துள்ளார். அவர் மன்றில் சமர்ப்பித்திருந்த கடிதம் குறிப்பிட்ட சமுர்த்தி ஊழியரை மிரட்டிப் பெறப்பட்டதாகவும் ஊழியருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குடும்பத்துடன் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகி விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது.

அதே நேரம் மேர்வின் சில்வாவிற்கு எதிராக நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் ஜேவிபி யினர் உள்ளதாக தெரிவிக்கும் மேர்வின் சில்வா பாதிக்கப்பட்ட சமுர்த்தி ஊழியர் தனக்கு எதிராக முறையிடும் பட்சத்தில் தான் பதவி விலகுவதாகவும் கூறியுள்ளார். கடந்த பொதுத்தேர்தல் பிரச்சாரங்களின்போது ஜெனரல் பொன்சேகா பாராளுமன்றுக்கு தெரிவானால் தான் தனது ஆசனத்தை ராஜனாமா செய்வேன் என தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com