Tuesday, August 31, 2010

மலேசியாவில் இலங்கையர்களை கடத்தி கொலை செய்த பொலிஸ் அதிகாரி கைது.

இலங்கையர்களை கடத்தி படுகொலை செய்த மலேசிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்று இலங்கையர்களை கடத்தி அதில் ஒருவரை படுகொலை செய்துள்ளதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரையும் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட இலங்கையரின் சடலம் கைவிலங்கிடப்பட்டு, நிர்வாணமான நிலையில், சந்தேக நபரின் வீட்டுக்கு எதிரில் நின்ற வாகமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட மற்றுமொரு இலங்கையர் கால் உடைந்த நிலையில் வாகனத்தில் இருந்தாகவும், மேலும் ஒருவரை கடத்தல்காரர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மலேசிய காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கப்பப் பணம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டும் முயற்சிகளின் போது குறித்த இலங்கையர் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மலேசியாவின் பிரதி காவல்துறை அத்தியட்சகர் ரோஸ்லி ஹசன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தரே இந்த கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களிடமிருந்து கப்பம் பெற்றுக் கொண்டதன் பின்னர் சடலத்தை வீசி எறிவதற்கு சந்தேக நபர்கள் முயற்சித்திருக்கலாம் என காவல்துறையினர் குறப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் ஆள் அடையாளங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எனினும், இவர்கள் அனைவரும் மூன்று நாட்களுக்கு முன்னர் மலேசிய விமான நிலையமொன்றின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழில் வாய்ப்பு அல்லது சுற்றுலா நோக்கத்திற்காக இவர்கள் மலேசியாவிற்கு சென்றிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது. கடத்தப்பட்ட ஏனைய இரண்டு இலங்கையர்களும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment