இலங்கை அரசியலில் கொலைகாரர்களுக்கே இடம் உள்ளது: சந்திரிக்கா குமாரதுங்க
இலங்கையில் நடந்துவந்த போர் முடிவுக்கு வந்தபோதும், இன்னமும் சமாதானம் ஏற்படவில்லை என்று விமர்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, இலங்கை அரசியலில் சதித்திட்டம் தீட்டக்கூடியவர்கள், கொலை, மோசடிகள் மற்றும் காடைத்தனம் புரிபவர்கள் ஆகியோருக்கே இடம் உள்ளது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
பொருளாதாரத்தை மட்டும் கட்டியெழுப்புவதன் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. வடகிழக்கில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசு எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்று அவர் விமர்சித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் வாழும் யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான பெண்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, புத்தளம் பிஸ்ருல் ஹாபி நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டுபேசுகையிலேயே சந்திரிக்கா இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தற்போது பெண்களுக்கோ, இளைஞர்களுக்கோ இடம் கொடுக்கப்படாமல் குடும்பமே ஆட்சியில் உள்ளது.இந்த நிலையில் எந்த தீர்மானத்தை எவர் கொண்டு சென்றாலும் அதில் எந்த பலனுமில்லை என்ற சந்திரிக்கா, மீண்டும் அரசியலுக்கு வருமாறு தமக்கு அழைப்புக்கள் வந்தபோதும், தாம் அரசியலிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டதாகத் தெரிவித்தார்.
இன்றைய அரசியலுக்கு சதித்திட்டம் தீட்டக்கூடியவர்கள், கொலை, மோசடிகள் மற்றும் காடைத்தனம் புரிபவர்கள் ஆகியோருக்கே இடம் உள்ளது.
குறிப்பாக கல்வித்துறையில் பின்னடைவு கண்டவர்கள், நாட்டுக்காக தம்மை வருத்தி பணியாற்ற முடியாதவர்களுக்குமே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்களாக இருப்பதை காண முடிகின்றது.
கல்வி கற்றவர்களும், துறைசார் நிபுணர்களும் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றனர். இவர்களுக்கு உரிய இடம் இங்கு வழங்கப்படுவதில்லை என்றும் விமர்சித்துள்ளார் சந்திரிக்கா.
0 comments :
Post a Comment