Friday, August 13, 2010

பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் புதிய சக்திவாய்ந்த நோய்க்கிருமி.

பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் புதிய சக்திவாய்ந்த நோய்க்கிருமி தலையெடுத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சக்திமிக்க நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகளுக்குக்கூட இந்தக் கிருமி அடங்காது என்று கூறப்படுகிறது. இந்த நோய்க்கிருமி “NDM-1” எனும் நுண்மத்தை உருவாக்குகிறது.

பிரிட்டனில் இதுவரை சுமார் 50 பேரிடம் மட்டுமே இக்கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆனால், கிருமியின் பாதிப்பு உலகெங்கிலும் பரவும் என்று அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்.
கடுமையான கண்காணிப்பும் புதிய மருந்துகளும் தேவை என்று லான்சட் தொற்றுநோய் வெளிய~டு கூறுகிறது.

இந்த “NDM-1” நுண்மம், “E.coli” போல பல்வேறு நோய்க்கிருமிகளில் காணப்படும்.
அதனால், மிகவும் சக்திமிகுந்த “கார்பனம்ஸ்” வகை நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகளால் கூட இக்கிருமியை அழிக்க முடியாது.

இந்த வகை நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்து, அவசர நேரங்களிலும் குணப்படுத்தச் சிரமமான கிருமித் தொற்றுகளுக்கும் மட்டுமே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி, நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கவல்ல ஆற்றல்கொண்ட மற்றவகை நோய்க்கிருமிகளுக்கும் இந்த நுண்மம் பரவக்கூடும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இதனால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் துரிதமாகப் பரவக்கூடிய ஆபத்தான நோய்க்கிருமி உருவாக்கக்கூடும். இதைக் குணப்படுத்துவது கிட்டத்தட்ட இயலாத ஒன்றாகும்.

ஆய்வாளர்கள் ஆராய்ந்த “NDM-1” நுண்மங்களில் குறைந்தது ஒன்று எல்லாவகை நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகளையும் எதிர்க்கவல்லது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் இத்தகைய கிருமி பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது மிகப்பெரிய உலகளாவியச் சுகாதாரப் பிரச்னையாகத் தலையெடுக்கக் கூடும் என்று அனைத்துலக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே, பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நோயாளிக்குக் கிருமி பரவி வருகிறது.

அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்ற நோயாளிகளுடன் இக்கிருமி பிரிட்டனுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com