Saturday, August 28, 2010

இந்தியாவில் புலிகளின் தடை தேவையா? பதில்சொல்ல இந்திய அரசியல்வாதிகள் தயக்கம்.

இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை இனியும் தேவையா? இதுபற்றிய மக்கள் கருத்தென்ன? என்பதை அறிய நேற்று மாலை டெல்லியில் நடந்த விசாரணையில் கலந்து கொண்டு தமது கருத்தினை தெரிவிக்க தமிழ் உணர்வாளர்கள் என்று கூறப்படும் ஒரு தலைவர் கூட ஆஜராகவில்லை.

ஆக பாஜக தரப்பிலிருந்து ஒருவர் மட்டும் ஆஜராகி, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை புலிப்பயங்கரவாதம் காவுகொண்டதிலிருந்து இந்தியாவில் புலிகள் மீதான் தடை கடந்த 20 ஆண்டுகளாக உள்ளது.

இந்தத் தடை தொடர வேண்டுமா... புலிகள் அமைப்பு பற்றிய இந்தியாவின் வருங்கால நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்க இந்திய உள்துறை அமைச்சகம் நேற்று மாலை 3.30 மணிக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம் சிங் குப்தா தலைமையில் ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

விடுதலைப் புலிகள் விஷயத்தில் மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்கான இந்தப் பொது விசாரணை, டெல்லி உயர்நீதிமன்றம் எண் 2 ல் நடந்தது. விடுதலைப் புலிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க நடந்த இந்தப் பொது விசாரணைக்கு தமிழக தலைவர்கள் என கூறிக்கொள்ளும் ஒருவர் கூட எட்டிப்பார்க்கவில்லை.

தமிழகத்திலிருந்து பாஜகவைச் சார்ந்த ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். அவர் தனது கருத்தை கூறும் போது, 'விடுதலைப்புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டு விட்டதாய் இலங்கை அரசு கூறுகிறது. இதனால், இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இல்லாத ஒரு இயக்கத்தை நினைத்து எதற்காக அச்சப்பட வேண்டும்?' என்று வாதாடினார்.

இந்த விசாரணையில் ஒருவரை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளாததால், அடுத்த மாதம் 21ம் தேதி சென்னையிலோ அல்லது டெல்லியிலோ இந்த விசாரணையை மீண்டும் நடத்த நீதிபதி முடிவு செய்துள்ளார். விசாரணை சென்னையில் நடக்கும்போதாவது மற்றவர்கள் கலந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com