முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்,
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை அவருக்கு தாக்கீது அனுப்பியும் அவர் ஆஜராகாததால், சிந்து மாகாண உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சர்மத் ஜலால் உஸ்மானி தலைமையிலான அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
மவுல்வி இக்பால் ஹைதர் என்பவர் முஷாரப்புக்கு எதிராக அரசியல் சாசனம் 6 ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அரசியல் சாசனத்தை நீக்குவது அல்லது அழிப்பது அல்லது அவை இரடையும் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும் அவர் இராஜதுரோக குற்றம் இழைத்தவராக கருதப்படுவார் என பாகிஸ்தான் அரசியல் சாசனத்தின் 6 ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரிவின் கீழ்தான் முஷாரப்புக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய இக்பால் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், முஷாரப் அரசியல் சாசனத்தை மீறியதாகவும், தேச வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும், நாட்டின் மதிப்புக்கும், கூட்டாச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றம் சாற்றியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு கடந்த காலங்களில் முஷாரப்புக்கு நீதிமன்றம் பலமுறை தாக்கீது அனுப்பியும் அவர் ஆஜராக தவறியதால், நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
மேலும் முஷாரப் தற்போது லண்டனை தனது இருப்பிடமாக கொண்டிருப்பதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிறப்பித்த உத்தரவை பிரிட்டன் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிடுமாறும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
0 comments :
Post a Comment