புகலிடம் கோருவோரை நாட்டுக்குள் அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்கட்டாம்.
புகலிடம் கோருவோரை நாட்டுக்குள் அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளது. புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோல்வியுறச் செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்கள் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சிவிலியன்களைப் போன்று நாட்டுக்குள் ஊடுருவக் கூடுமென்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக காலியில் கலந்துரையாடலொன்றை நேற்று ஆரம்பித்து வைத்த பாதுகாப்புச் செயலாளர், அதில் கலந்து கொண்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். பயிற்சி பெற்ற புலி உறுப்பினர்கள் புகலிடம் கோருபவர்களைப் போன்று ஏனைய நாடுகளுக்குள் ஊடுருவலாமென்றும் அதனால் அந்த நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாமென்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
கடல் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பினைப் பகிர்ந்து கொள்வதற்கான காலி கலந்துரையாடலை பாதுகாப்பு அமைச்சின் சார்பில் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று ஆரம்பமான கலந்துரையாடல் இன்றும் நடைபெறுகிறது. இதில் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் புகலிடம் கோரிச் செல்வோரின் தொகை அதிகரித்து வருவதால், பாதுகாப்புச் செயலாளர் சர்வதேச சமூகத்திற்கு இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
0 comments :
Post a Comment