Wednesday, August 18, 2010

பாகிஸ்தானுக்கு உலக வங்கி 900 மில்லியன் டாலர் உதவி

வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு உலக வங்கி கடனாக 900 மில்லியன் டாலர் வழங்க முன்வந்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளப்பெருக்கினால் அங்கு 20 மில்லியன் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அந்தப் பேரிடரில் சுமார் 2000 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 80 ஆண்டுகளில் என்றும் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் கன மழையால் வெள்ளப்பெருக்கின் பாதிப்பு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பல வாரங்களாக வெள்ளநீர் கிராமங்களை சூழ்ந்துள்ளதால், போதிய சுகாதாரமில்லாமல் காலரா, வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் பரவி வருகின்றன.

வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் ஒரு புறம், இன்னொரு பக்கம் தொற்று நோய்கள் பரவும் ஆபத்து இப்படி பல துயரங்களுக்கிடையில் மக்கள் சிக்கித் தவிப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.

முகாம்களில் தங்கியுள்ள மில்லியன் கணக்கான மக்களிடம் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பாக 3.5 மில்லியன் சிறார்களிடம் நோய் பரவக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆகவே பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்க 460 மில்லியன் டாலர் தேவைப்படுவாதகவும் ஆனால் அந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையே உலக நாடுகளிடமிருந்து பாகிஸ்தானுக்கு கிடைத்திருப்பதாகவும் ஐநா கூறுகிறது.

பாகிஸ்தான் வரலாற்றில் இது போன்ற வெள்ளத்தை பார்த்ததில்லை என இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூனும், “இதுபோன்ற பேரிடரை இதுவரை நான் பார்த்ததில்லை,” என்று கூறியுள்ளார்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் குறிப்பாக சிந்து மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறின.

No comments:

Post a Comment