723 புலி உறுப்பினர்கள் உட்பட 1562 பேர் ஒரு மாதத்தில் கைது. பிரதமர் ஜயரட்ண
இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்தும் வெளியிடங்களில் இருந்தும் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் மொத்தமாக 1562 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ண நேற்று செவ்வாய்க்கிழமை சபைக்கு அறிவித்தார்.இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து கைது செய்யப்பட்ட 723 விடுதலைப் புலி உறுப்பினர்களும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட 765 பேரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 74 பேரும் இதில் அடங்குவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவசரகாலச் சட்டநீடிப்பு பிரேரணையை விவாதத்துக்கென சபைக்கு சமர்ப்பித்துப் பேசும் போதே பிரதமர் ஜயரட்ண இந்தப் புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.கைதில் இருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்கள், இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களிலுள்ள மக்கள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் போன்றோரிடம் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
"கைதில் இருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் உள்ள மக்களிடம் இருந்தும் புனர்வாழ்வு முகாம்களிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் இருந்தும் கிடைத்த தகவல்களுக்கு அமைய நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமான ஆயுதங்களும் நாசகார உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.அதேபோல் கிடைக்கும் இந்த தகவல்களைப் பயன்படுத்தி விடுதலைப்புலி உறுப்பினர்களையும் இனங்கண்டு அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைது செய்யப்படும் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்டு வரும் வீடுகள், காணிகள், பல்வேறு வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிடமுள்ள சொத்துகளை அரச உடைமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் பிரசார நடவடிக்கைகளை அவர்கள் மீண்டும் பரப்ப முயற்சித்து வருவதாகத் தகவல்கள் கிடைத்து வருகின்றன. சர்வதேச விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் நபர்களுடன் தொடர்புகளைப் பேணி விடுதலைப் புலி உறுப்பினர்களை மீண்டும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு மீண்டுமொரு தமிழீழத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தெளிவு.
அத்துடன், விடுதலைப் புலிகளுக்கென நிதிசேகரித்து சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர்களை ஒன்றுசேர்த்து அவர்களது அமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விடயங்கள் வெளிவந்துள்ளன. பயங்கரவாதிகளுக்கு உதவி உபகாரங்களைச் செய்த கனடாவின் அரச சார்பற்ற அமைப்பொன்று அந்த நாட்டு அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலும் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகத் தமிழ் நபர் ஒருவர் ஒரு வருடம் சிறை வைக்கப்பட்டுள்ளார். மேற்குறித்த விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்துமிடத்து பயங்கரவாதம் இலங்கை பூமிக்குள் ஒழிக்கப்பட்டாலும் நாம் பெற்ற அமைதியை நிரந்தர சமாதானமாக்குவதற்கு அவசரகாலச் சட்ட நிலைமையை நாடு முழுவதும் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டுமென சபைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
0 comments :
Post a Comment