திருப்பதி ஆலயத்தில் 65 கோடி ரூபாய் ஊழல்
ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் புதிய நிர்வாகக் குழு அமைப்பு
உலகப்புகழ்பெற்ற பணக்கார ஆலயமான திருப்பதி ஆலயத்தில் ஊழல் தலை விரித்தாடுகிறது என்று நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தின் ஊழல் பற்றிய புகார்களை விசாரித்ததில் 65 கோடி ரூபாய் வரையிலும் ஊழல் நடந்துள்ளதாக மாநிலப் போலிசார் கூறுகின்றனர்.
இந்த ஊழலில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் காணாமல் போய்விட்ட சம்பவமும் வஸ்திர அலங்காரச் சேவைக்கான கட்டணச் சீட்டு விற்றதில் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் நடந்த ஊழலும் அந்த ஆலயத்தில் பெரிய பிரச்னையைக் கிளப்பி விட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக் கும் முயற்சியில் எதிர்க் கட்சிகள் கொடி பிடிக்கத் தொடங்கி விட்டன. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஆந்திர மாநிலத்தின் ஆந்திர போலிசார் நடத்தும் இந்த விசாரணை மட்டும் போதாது. இதில் பல தகவல்கள் மூடி மறைக்கப்படலாம். உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்படலாம் என்றும் இந்த ஊழல் பிரச்சினையை விசாரிப்பதற்கு மத்திய புலனாய்வுத்துறை நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலயத்தில் நடக்கும் ஊழல் அட்டூழியங்களை அடக்குவதற்கு ஆலயமோ அரசோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை என்றும் கண்துடைப்புக்காக அந்த ஆலயத்தின் நிர்வாகத் தலைவரை மட்டும் மாற்றியுள்ளது ஆலயம் என்று தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் நடிகர் சிரஞ்சீவியும் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பதி ஆலயத்தில் நடக்கும் ஊழலை விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறை நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்போதுதான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் திரு சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஆந்திர மாநில அரசு, திருப்பதி ஆலயத்தின் நிர்வாகக் குழுவில் உள்ள இரு நிர்வாக அதிகாரிகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைவரையும் நீக்கிவிட்டு புதிய குழு ஒன்றை அமைத்துள்ளது.
0 comments :
Post a Comment