ஈராக் இராணுவத்தலைமையகம் அருகே தற்கொலைத் தாக்குதல். 58 பேர் பலி.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ராணுவத் தலைமையகத்திற்கு தற்கொலைதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டதாகவும் 300 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் ஈராக் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு இடம்பெற்ற தற்கொலக் குண்டுத்தாக்குதலில் ராணுவத்தில் சேர்வதற்காக அந்த இடத்தில் நீண்ட நேரம் காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தாக பாக்தாத் தகவல்கள் கூறுகின்றன.
பாக்தாத்திலுள்ள முக்கியமான பஸ் சந்திப்பு நிலையத்திற்கு அருகே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் ராணுவத்தில் சேர்வதற்காக அங்கு கூடியிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மூன்று ராணுவ வீரர்களும் குண்டு வெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்த 119 பேர் பாக்தாத்திலுள்ள நான்கு மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
முன்பு ஈராக்கிய தற்காப்பு அமைச்சு கட்டடம் இருந்த இடத்திற்கு வெளியே நேற்று காலை குண்டு வெடித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். அந்த இடத்தில் தற்போது ராணுவத் தலைமையகம் அமைந்துள்ளது. அப்பகுதியில் வாரத்திற்கு 250 பேர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
ஈராக்கிலுள்ள அமெரிக்க போர்ப் படையினரை அமெரிக்கா இந்த ஆகஸ்ட் மாதத்திற்குள் மீட்டுக்கொள்ளவிருக்கும் வேளையில் இத்தாக்குதல் நடந்துள்ளது. ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படை வீரர்கள் அனைவரும் படிப்படியாக மீட்டுக் கொள்ளப்படுவர் என்று அமெரிக்கா அறிவித்துள்ள வேளையில் ஈராக்கின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்க ஈராக்கியப் படையினர் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக ராணுவத்தில் புதியவர்களை சேர்க்கும் நடவடிக்கையை ஈராக் துரிதப்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment