Wednesday, August 25, 2010

விண்வெளியில் 553 நாட்கள் உயிரோடு இருந்த பாக்டீரியாக்கள்! ஏ.கே.கான்

தெற்கு இங்கிலாந்தின் கடலோரத்தில் சிறிய மலைப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பாக்டீரியாக்கள் காற்றே இல்லாத விண்வெளியில் சுமார் 553 நாட்கள் உயிரோடு இருந்து, பல்கிப் பெருகி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளன.

இங்கிலாந்தின் டெவோன் பகுதியில் பீர் எனப்படும் கிராமத்தின் கடலோர மலைப் பகுதியில் இருந்து எடுக்கபட்ட கற்களில் ஒட்டியிருந்த இந்த பாக்டீரியாக்கள் விண்ணில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்தின் வெளியே 2008ம் ஆண்டில் அந்த கற்களோடு சேர்த்து வைக்கப்பட்டன.

காற்றில்லாத, கதிர்வீச்சு நிறைந்த, கடும் வெப்ப மாறுபாடுகள் நிறைந்த அந்த வெற்றிட சூழலில் இவை எத்தனை நாட்கள் உயிரோடு தாக்குப் பிடிக்கின்றன என்பதை ஆராய்ந்தனர்.

ஆனால், சுமார் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து, இந்த பாக்டீரியாக்களில் ஏராளமானவை உயிரோடு உள்ளன. அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் ஆரம்பித்து அனைத்து விதமான அபாயகரமான கதி்ர்வீச்சுக்கள், கடும் வெப்பம்-மிகக் கடுமையான குளிர் என பல சுற்றுச்சூழல் தாக்குதல்களை இவை எப்படித் தாக்குப் பிடித்தன என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோஸின்தஸிஸ் எனப்படும் சூரிய ஒளியைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உணவு, ஆக்ஸிஜனைத் தயாரித்துக் கொள்ளும் இந்த பாக்டீரியாக்கள் அபாயகரமான கதிர்வீச்சுக்களை எப்படித் தாங்கின என்று தெரியவில்லை. இதற்கான பதில் அவற்றின் டி.என்.ஏக்களில் இருக்கலாம் என்று தெரிகிறது.

இதன்மூலம் பூமிக்கு உயிர் வேறு கிரகத்தில் இருந்து தான் வந்தது என்ற 'தியரிக்கு' அதிக பலம் கிடைத்துள்ளதாக நாஸா கூறியுள்ளது. நுண்ணிய உயிர்கள் விண் கற்களில் ஒட்டிக் கொண்டு கிரகங்களை விட்டு கிரகங்கள் பயணிப்பது சாத்தியமே என்பதை இந்த பாக்டீரியாக்கள் நிரூபித்துவிட்டன என்கிறார்கள்.

இப்போது பூமிக்கு கொண்டு வரப்பட்டுவிட்ட இந்த பாக்டீரியாக்கள் இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழகத்தில் (Open University (OU) in Milton Keynes) ஆராயப்பட்டு வருகின்றன.

இந்த பாக்டீரியாக்களின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் வெளியிடப்படவில்லை. 'OU-20' என்று மட்டுமே குறிப்பிடப்படும் இந்த பாக்டீரியா 'Gloeocapsa' என்ற பாக்டீரியாவைப் போன்றே தடினமான செல் சுவர் கொண்டது.

இவை வி்ண்வெளியில் இத்தனை காலம் தப்பியதற்கு அதன் தடிமனான செல் சுவரும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். மேலும் இந்த பாக்டீரியாக்கள் கூட்டாக இணைந்து காலனியாக மாறி, அதன் நடுப் பகுதியில் இருந்த பாக்டீரியாக்களை கடும் வெப்பம், கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அத்தோடு கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வாழ்வதற்கான சத்துக்களை இவற்றின் டி.என்.ஏக்கள் தயாரித்திருக்கலாம் என்று தெரிகிறது.

பல்கலைக்கழகத்தில் இந்த பாக்டீரியாக்களை இப்போது ஆராய்ந்து வரும் குழுவின் தலைவரான டாக்டர் கெரன் ஓல்ஸ்ஸான் பிரான்சிஸ் கூறுகையில், இந்த வகை பாக்டீரியாக்களைக் கொண்டு ஆக்ஸிஜனைத் தயாரிக்கலாம், வாயுக்கள் உள்பட அனைத்தையும் 'ரீ-சைக்கிள்' செய்யலாம். பாறைகளில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கவும் கூட பாக்டீரியாக்களை பயன்படுத்த முடியும் என்கிறார்.

1 comment:

  1. Finally, an issue that I am passionate about. I have looked for information of this caliber for the last several hours. Your site is greatly appreciated.

    ReplyDelete