3.5 மி. பாகிஸ்தான் சிறார்களுக்கு நோய் பரவும் ஆபத்து .
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூன், அவதியுறும் மக்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். ஆகவே அவர்களுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தகவல்கள் கூறின.
பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு ‘நெஞ்சை நெகிழச் செய்யும்’ பேரிடர் என்று திரு பான் கீ மூன் குறிப்பிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பிறகு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடன் சேர்ந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் திரு பான் கீ மூன் கலந்து கொண்டார்.
“இந்த பேரிடர் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு நான் இதுவைர பார்த்திராத ஒன்று,” என்று அவர் குறிப்பிட்டார். வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவிப்போருக்கு தங்க இடமும் நோய் தொற்றும் அபாயத்தை தடுக்க மருந்துப் பொருட்களும் மக்களுக்கு உடனடியாக தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
ஆகவே உலக நாடுகள் பாகிஸ்தானுக் கான உதவியை விரைவாக செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தானுக்கு 460 மில்லியன் டாலர் நிதி உதவி தேவைப்படுவதாக அவர் கூறினார்.
பாகிஸ்தானில் சுமார் 20 மில்லியன் பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் கூறுகிறது. குறைந்தது 1,600 பேர் வெள்ளத்திற்கு பலியாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ள வேளையில் புதிதாக மற்றொரு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற அறிவிப்பு மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
0 comments :
Post a Comment