அமெரிக்க படையினரின் உதவி 2020 வரை தேவைப்படுகிறது: ஈராக் இராணுவம்
ஈராக்கிலிருந்து 2011 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கப் படையினர் அனைவரையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்பது அவசரமான முடிவு என்றும், அவர்களது உதவி 2020 ஆம் ஆண்டு வரை தேவைப்படுவதாகவும் ஈராக் இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள ஈராக் இராணுவ உயரதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் பாபாகீர் ஜெர்பாரி, இன்னும் ஒரு பத்தாண்டு காலத்திற்காவது அமெரிக்க படையினர் ஈராக்கில் இருப்பது அவசியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அமெரிக்க படையினர் படிப்படியாக திரும்ப பெறப்பட்டுக்கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் எல்லாமே நல்லபடியாகவேத்தான் நடக்கும்.ஏனெனில் அவர்கள் இன்னும் இங்கு இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் 2011 ஆம் ஆண்டில் அமெரிக்க படையினர் முற்றிலும் திரும்ப பெறப்பட்ட பின்னர்தான் பிரச்சனையே தொடங்கும். எனவே அமெரிக்கப் படையினரை திரும்ப பெற்றபின்னர் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப மாற்று வழிகளை அரசியல்வாதிகள் கண்டறியவேண்டும்.
அமெரிக்க படையினரை திரும்ப பெறுவது குறித்து என்னிடம் கருத்து கேட்டால், ஈராக் இராணுவம் முழுமையாக தயாரகும் 2020 ஆம் ஆண்டு வரை அமெரிக்க படையினர் இங்கு இருக்கவேண்டும் என்றுதான் கூறுவேன் என அவர் அப்பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.
ஈராக்கில் தற்போது 64,000 அமெரிக்க படையினர் உள்ளனர்.ஆனால் இந்த மாத இறுதியில் அது 14,000 ஆக குறைந்துவிடும்.மற்றவர்கள் அமெரிக்காவுக்கு திரும்ப அழைக்கப்பட்டுவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment