Sunday, July 11, 2010

JULY11 உலக மக்கள் தொகை நாள் ( World Population Day) - புன்னியாமீன்

உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.

1987ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் திகதியை (World Population Day, recognized by the UN ) உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. 1989 முதல் இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தொகை கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி 2010 ஜூலை 10 ம் தேதி உலகின் மக்கள் தொகை 6,854,901,988 - 00:46 UTC (EST+5) Jul 10, 2010 அதாவது 685 கோடியாகும். சராசரியாக உலக மக்கள் தொகை நிமிடத்திற்கு 150 பேர், மணிக்கு 9000 பேர், நாளைக்கு 2,160,000 பேர் என்ற வேகத்தில் அதிகரித்து வருவதாக மதிப்பீட்டின் பிரகாரம் கூறப்படுகின்றது.

உலக சனத்தொகை அதிகரிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சனத்தொகைக் கல்வி நிறுவகத்தின் அறிக்கை பிரகாரம் கி.பி. 01இல் உலக சனத்தொகை சுமார் 20 மில்லியன்களாக காணப்பட்டது. இத்தொகை கி.பி. 1000ஆம் ஆண்டில் 275 மில்லியனாகவும், கி.பி. 1500ஆம் ஆண்டில் 455 மில்லியனாகவும், 1650ஆம் ஆண்டில் 500 மில்லியனாகவும், 1750ஆம் ஆண்டில் 700 மில்லியனாகவும் காணப்பட்டது. இவ்வாறு அதிகரித்த மக்கள் தொகை 1804ஆம் ஆண்டில் 1 பில்லியனாகவும், 1850ஆம் ஆண்டில் 1.2 பில்லியனாகவும், 1900 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாகவும், 1927ஆம் ஆண்டில் 2 பில்லியனாகவும், 1950ஆம் ஆண்டில் 2.55 பில்லியனாகவும், 1960ஆம் ஆண்டில் 3 பில்லியனாகவும், 1975ஆம் ஆண்டில் 4 பில்லியனாகவும், 1987ஆம் ஆண்டில் 5 பில்லியனாகவும் உயர்ந்தது. இத்தொகை 1990ஆம் ஆண்டில் 5.3 பில்லியனாகவும், 1995ஆம் ஆண்டில் 5.7 பில்லியனாகவும், 1999ஆம் ஆண்டில் 6பில்லியனாகவும், 2006ஆம் ஆண்டில் 6.5பில்லியனாகவும் உயர்ந்து தற்போது (2009 ஜுலை) 6.76 பில்லியனாக ஆகியுள்ளது. 2012ஆம் ஆண்டில் 7 பில்லியனாகவும், 2020ஆம் ஆண்டில் 7.6 பில்லியனாகவும், 2030ஆம் ஆண்டில் 8.2 பில்லியனாகவும், 2040ஆம் ஆண்டில் 8.8பில்லியனாகவும், 2050ஆம் ஆண்டில் 9.2 பில்லியனாகவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தைத் தொடர்ந்து சனத்தொகையானது மிக வேகமாக பல மடங்குகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடியும்.

இன்று உலகளாவிய ரீதியில் அதிக சனத்தொகைக் கொண்ட 15 நாடுகளை எடுத்துக் கொள்ளுமிடத்து மக்கள் தொகை கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி பின்வருமாறு அமைந்துள்ளது.

1. சீனா 1,331,630,000 (19.67%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
2. இந்தியா 1,165,930,000 (17.22%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
3. ஐக்கிய அமெரிக்க 306,829,000 (4.53%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
4. இந்தோனேசியா 230,512,000 (3.4%) ஜுன் 24, 2009 மதிப்பீட்டின்படி
5. பிரேசில் 191,437,000 (2.83%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
6. பாக்கிஸ்தான் 166,826,000 (2.46% ) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
7. பங்களாதேஸ் 162,221,000 (2.4%) ஐ.நா மதிப்பீட்டின்படி
8. நைஜீரியா 154,729,000 (2.29%) ஐ.நா மதிப்பீட்டின்படி
9. ரஸ்யா 141,832,000 (2.1%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
10. ஜப்பான் 127,580,000 (1.89%) மே 1, 2009 மதிப்பீட்டின்படி
11 மெக்சிகோ 109,610,000 (1.62%) ஐ.நா மதிப்பீட்டின்படி
12. பிலிப்பைன்ஸ் 92,226,600 (1.36%) ஜனவரி 1, 2009 மதிப்பீட்டின்படி
13. வியட்னாம் 88,069,000 (1.3%) ஐ.நா. மதிப்பீட்டின்படி
14. ஜெர்மனி 82,062,200 (1.21%) ஜனவரி 1, 2009 ஐ.நா. மதிப்பீட்டின்படி
(15) எத்தியோப்பியா 79,221,000 (1.17%) ஜுலை 5, 2008 மதிப்பீட்டின்படி ஆகியன அமைந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட அட்டவணைப்படி உலக சனத்தொகையில் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் ஆகியன கூடிய சனத்தொகைக் கொண்ட நாடுகளாக இருப்பதை அவதானிக்கலாம். 2009ஆம் ஆண்டு ஜுலை 05ம் திகதியின் மதிப்பீட்டின் பிரகாரம் இப்பட்டியலில் இலங்கை 56ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை சமூகக் குறிகாட்டிகள் பலவற்றில் மாறுபட்ட போக்கைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இங்கு வருடாந்த இயற்கை அதிகரிப்பு வீதம் 1.1 ஆகவும், பிறப்புவீதம் 1000 பேருக்கு 17.9 வீதமாகவும், இறப்பு வீதம் 1000 பேருக்கு 6.6 வீதமாகவும் காணப்படுகின்றது.
இலங்கையின் 2001 ஆம் ஆண்டு குடித்தொகை கடிகாரத்தின் பிரகாரம் 18,797,257 தொகையாகவும், 2007 ஆம் ஆண்டில் 20,010,000 தொகையாகவும் இருந்த குடித்தொகை தற்பொழுது 2009ஆம் ஆண்டு மதிப்பின் படி 21,128,772 தொகையாக உயர்வடைந்துள்ளது. இங்கு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 78 வயதாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் சராசரிக் குடித்தொகை வீதத்தினை நோக்கும் போது, 1995 முதல் 2000 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.37 வீதமாக இருந்த வளர்ச்சி வீதம் அண்மைய தரவுகளின் படி 1.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இது 2050 ஆண்டில் 0.45 வீதமாக மேலும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் கருவளவீதமானது 1965 ஆம் ஆண்டில் 5.19 வீதமாகவும், 1975 ஆண்டில் 3.6 வீதமாகவும், 1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 1.96 வீதமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு குறைவடையும் போக்கானது, பெண்கள் கல்வியில் ஈடுபாடு, திருமண வயதில் ஏற்பட்ட மாற்றம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, பெண்களின் தொழில் அந்தஸ்து அதிகரிப்பு போன்ற காரணங்களாக அமைந்ததெனலாம்.

உலகளாவியரீதியில் தற்பொழுது வளர்ச்சியடைந்து வரும் குடித்தொகையானது, குடித்தொகைக் கடிகாரத்தின் 2009 ஆண்டு கணிப்பின் படி, குடித்தொகை வளர்ச்சி வீதமானது 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது. எனினும் 2050 ஆம் ஆண்டில், குடித்தொகை வளர்ச்சி 0.5 வீதமாக குறைவடைகின்ற பொழுதிலும், உலக சனத்தொகையானது 900 கோடியாக பதிவாகும் என அமெரிக்க குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

குடித்தொகையானது இதே வேகத்தில் வளர்ந்து கொண்டு செல்லுமாயின் 2075 ஆம் ஆண்டில் 1000 கோடியாகவும் 2200 ஆம் ஆண்டில் 1,200 கோடியாகவும் உயரும் என குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கைகள் பலவற்றில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான பிரதான காரணங்களாக பிறப்பு வீதம், இறப்பு வீதம் என்பன அமைந்துள்ளன. உலக மக்கள் தொகை நிர்ணயப்படி பிறப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண்களின் கருவலம் பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கின்றது. இனப்பெருக்க திறன்கொண்ட பெண்கள் பெறும் உயிருள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ‘கருவலம்” எனப்படும். ஓராண்டில் ஆயிரம் மக்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் எனப்படும். நாடுகளின் பிறப்பு வீதமானது உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் பிரிக்கும்போது வருகின்றது. பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக வயது, மதம், கல்வி நிலை, பொருளாதார நிலை, இருப்பிடம் போன்றன அமைகின்றன.

குறித்தொரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களில் ஆயிரம் பேருக்கு மரணம் அடைகின்றோரின் எண்ணிக்கை ‘இறப்பு வீதம்” என்பர். நாடுகளின் இறப்பு வீதம் எனும்போது இறந்தோரின் மொத்த எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் வகுக்கும்போது பெறப்படும் எண்ணிக்கையாகும். பொதுவாக இறப்பு வீதத்தைவிட பிறப்பு வீதம் அதிகமாகக் காணப்படுவதே குடித்தொகைப் பெருக்கத்திற்கான காரணமெனலாம். நவீன காலத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றம் பெருமளவுக்கு இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.
பூமியில் உள்ள வளங்கள் 200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு நாளும் பூமியின் வளங்களை புதிதாக இரண்டு லட்சம் பேரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் வாழும் பூமிக்கு நாமே ( மனிதர்கள் ) பாரமாகிவிட்டோம் எனும் நிலைக்கு மனித சனத்தொகை அதிகரித்துவிட்டதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இந்த சனத்தொகை அதிகரிப்பானது பூமியில் இருக்கும் பயன்பாட்டுக்குரிய வளத்தை விட அதிகமாக உருவாகி வருவதால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சனை என்பது உலகில் விரைந்து அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது.இதனை ஈடு செய்ய நீர் முகாமைத்துவப் பயன்பாடு மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் உற்பத்திகளை அபரிமிதமாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இருப்பினும் இது விடயத்தில் சிக்கல்களும் நிறைந்திருக்கின்றன.

பூமியின் கொள்ளளவை விஞ்சிய உலக சனத்தொகை அதிகரிப்பானது ஆபத்தான விளைவுகளையே உருவாக்கும் என்பதால் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை பூமியில் தோன்றி இருக்கின்றது என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.மனித இனத்தின் பெருக்கம் பூமியின் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பையும் அதிகரிக்க வகை செய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை பெருக்கத்தின் பாதிப்பு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் பார்க்க அபிவிருத்தியடையாத நாடுகளிலே அதிகமாகக் காணப்படுகின்றன. காரணம் உலக வளத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை வெறும் 20 சதவீதம்தான். மாறாக வெறும் 20 சதவீத வளத்தைக் கொண்டிருக்கும் அபிவிருத்தியடையாத நாடுகளான ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ 80 சதவீதம்.
ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் பொருளாதார வளம் இருந்தாலும் குடும்பத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தவறினால் வளம் வறண்டு விடும். வாழ்வு வீழ்ந்து விடும். அளவோடு பெற்றால் தான் வளமோடு வாழ முடியும். வீட்டுக்குப் பொருந்தும் இந்த நியதி நாட்டுக்கும் பொருந்தும்.

ஜூன் 2009இல் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ரஸ்யா, இங்கிலாந்து ஆகிய ஜி.8 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ‘உலக வறுமையும், பற்றாக்குறையும்” என்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெர்சின் கூறியதாவது உலகில் உள்ள ஆறு பேரில் ஒருவர் பசிக்கொடுமைக்கு உள்ளாகிறார். உலகில் 6 விநாடிக்கு ஒரு குழந்தை போதிய சத்துணவின்மையினால் இறக்கிறது. ஆப்பிரிக்க மண்டல நாடுகள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நிலை கடந்த 20 ஆண்டுகளில் எப்போதும் இருந்ததில்லை. இதே நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஆபத்து ஏற்படும். மனிதாபிமான அவலத்தின் விளிம்பில் உலகம் உள்ளது. இதனை எதிர் கொள்ள முழுமையாக நன்கொடைகளையே நம்பியுள்ளோம்.” என்றார். இக்கருத்து இவ்விடத்தில் ஆழமாக ஆராயப்படல் வேண்டும்.

2012 இன் ஆரம்பத்தில் உலக சனத்தொகை 700 கோடியை எட்டிவிடுமெனவும் 2050 இல் 900 கோடியைத் தாண்டி விடுமெனவும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும். 2010 - 2050 வரையான காலப்பகுதியில் உலக சனத்தொகையின் அரைப்பங்கை கொண்டதாக 9 நாடுகள் இருக்குமென கூறப்படுகிறது. அதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை அடங்கியுள்ளன.
ஏனைய நாடுகள் நைஜீரியா, எதியோப்பியா, கொங்கோ குடியரசு, தான்சானியா ஆகியவை அதிகளவு சனத்தொகையை கொண்ட நாடுகளாக இருக்கும். அண்மைய மதிப்பீடுகளில் பாரிய மாற்றங்கள் இல்லையென்று பொருளாதார, சமூக விவகாரத் திணைக்களத்தின் குடித்தொகை பிரிவின் பணிப்பாளர் ஹானியா ரிவிசன் தெரிவித்துள்ளார். 2050 இல் உலக சனத்தொகை 901 கோடியாயிருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். உலக சனத்தொகை எதிர்பார்ப்புகள் தொடர்பாக 2008 இற்கான மீளாய்வு அறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

பெண் ஒருவருக்கு 2.5 பிள்ளைகள் என்ற விகிதத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் உள்ளது. இப்போதிலிருந்து 2050 வரை பெண் ஒருவருக்கு 2.1 பிள்ளைகள் என்ற விகிதத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடையுமென கணிப்பிடப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். மிகக்குறைந்தளவு வளர்ச்சியடைந்த 49 நாடுகளில் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. வருடாந்தம் 2.3 வீதத்திற்கு சனத்தொகை பெருகி வருவதாக குடித்தொகை மதிப்பீட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியில்லை. சுற்றுச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றிலிருந்து வன்முறை, கொலை, கொள்ளை வரையிலாக அனைத்தும் அளவுக்கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என்ற உறுதியாகச் சொல்லலாம்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் வனவளம் அருகி, மண் அரிப்பு பெருகி சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. கான்கிரீட் காடுகளின் வளர்ச்சியால் பயிர் காடுகளுக்கான நிலப்பரப்பு குறைந்து வருகிறது. கிராம மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே குடிசைகள் பெருகி சுற்றுச் சூழல் சீர் கெடுகிறது. குடிநீர்ப் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறைஇ போக்குவரத்து நெரிசல், மருத்துவமனைகளில் கூட்டம், பள்ளிக்கூடங்களில் இடமின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நகரங்கள் நரகங்களாகின்றன.

மேற்குறிப்பிட்ட அடிப்படையில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை நேரடியாக நோக்குவோம். அவை அடிப்படையில் உணவுப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, வதிவிடப் பிரச்சினை என வகுக்கலாம். கல்வி வசதி, மருத்துவ வசதி, சுகாதார வசதி, போக்குவரத்து வசதி முதலிய சமூக நலச் சேவைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளென பல குடித்தொகை பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கின்றன. இவற்றினால் அதிகளவில் பாதிக்கப்படுவன அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளே.

குடிசனப் பெருக்கத்தினால் இன்றைய உலகம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினை உணவுப் பிரச்சினையாகும். அதிகரித்துவிட்ட மக்களுக்கு போதிய உணவுமில்லை. ஊட்டமான உணவுமில்லை. உலகில் மக்கள் தொகை மூன்றிலொரு பங்கினர் உணவுப் பற்றாக்குறையினால் தவிக்கின்றனர். மூன்றிலொரு பங்கினருக்கு மாத்திரமே போதுமானளவு உணவு கிடைக்கின்றது. அத்துடன், வேலையில்லாப் பிரச்சினை குறைவிருத்தி நாடுகளில் அதிகளவில் தலைதூக்கியுள்ளன. அதனால்தான் அண்மைய ஆண்டுகளில் பலவிதமான தொழில்களை நாடி இலங்கை, இந்திய மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் இடம்பெயர்கின்றனர். மூளைசாலிகள் வெளியேறுவதும், மனிதவலு வேளியேறுவதும் ஒரு நாட்டின் ஏற்பட்டிருக்கும்

வேலையில்லாமையினாலும் ஊதியக் குறைவினாலுமாகும். பொதுவாக பயிர்ச்செய்கை பொருளாதாரத்திலேயே தொழில் பிரச்சினை அதிகளவு காணப்படுகிறது. அதிகரிக்கும் மக்கட் தொகைக்கு வேலை வழங்கும் திறன் பயிர்ச்செய்கைக்கு இல்லை. அதனால்தான் குறைவிருத்தி நாடுகள் இன்று கைத்தொழில் ஆக்கங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இன்று முக்கியமாக நகர்ப்புறங்களில் வதிவிடப் பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. மக்கள் தொழில் நாடி நகரங்களில் குடிபெயருவதால் நகரங்களில் இருப்பிடமின்மை உருவாகின்றது. நியுயோர்க், லண்டன், ஹொங்கொங், பரிஸ் போன்ற பெரிய நகரங்களில் மாத்திரமன்றி கொழும்பு போன்ற சிறிய நகரங்களிலும் வதிவிடப் பிரச்சினைகள் உருவாகுகின்றன. அதனால்தான் வானளாவிய மாடிக்கட்டடங்கள் இந்த நகரங்களில் கட்டப்பட்டு வருகின்றன. பண்டைய காலம் முதலே குடித்தொகைப் பிரச்சினை பொருளாதார புவியியல் அறிஞர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது. இப்பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து அறிஞர்கள் மக்கள் தொகைக் கோட்பாடுகளை விஞ்ஞானபூர்வமாக உருவாக்கியுள்ளனர்.
மேலும், சனத்தொகை பிரச்சினை உக்கிரமடைய உலகக் குடிப்பரம்பலும் ஒரு காரணமாக அமைகின்றது. கிழக்காசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய ஐரோப்பிய நாடுகளிலும் வடக்கில் அமெரிக்க நாடுகளிலும் சனத்தொகை பரம்பல் அதிகரிப்புக்கான காரணங்களாக பயிர்ச்செய்கைக்கு உகந்த விளைநிலங்கள் காணப்படுவதும், உகந்த காலநிலை காணப்படுவதும் பிரதான காரணிகளாக அமைகின்றன. அதேநேரம், அதிகக் குளிர்ப் பிரதேசங்கள், அதிக வெப்பப் பிரதேசங்கள்ää அதிக ஈரழிப்பான பிரதேசங்கள், அதிக உயரமான பிரதேசங்களில் சனத்தொகைப் பரம்பல் மிக ஐதாகக் காணப்படுகின்றது.

மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து இரு வேறு கருத்துக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ‘பிறக்கும் குழந்தை வயிரோடு மட்டும் பிறக்கவில்லை. உழைப்பதற்கு இரு கரங்களோடு பிறக்கிறது’ இது சமவுடமைவாதிகளின் கருத்தாகும். அதாவதுää பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சமவுடமைவாதம் மூலதனமாகவே கருதுகின்றது. மறு சாரார். ‘கரங்கள் உழைப்பது சில காலம்தானேஇ ஆனால் காலம் முழுக்க வயிற்றுக்கு சோறிட வேண்டுமே’ என்று வேதனை கொள்கிறது இது முதலாளித்துவவாதத்தின் அடிப்படை. ‘ஒரு ஜோடிக் கரங்கள் பல ஜோடி வயிற்றுக்கு காலமெல்லாம் காப்பாற்றுமே’ என்ற நம்பிக்கையை பின்னைய கருத்து ஏற்படுத்துகின்றது. இதை வேறுவிதமாகக் கூறும்போது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுமையாகவே கொள்ளப்படுகின்றது.

அறியப்பட்ட வளங்களை கணக்கில் கொண்டு உலக மக்கள் தொகை மிகையாக (Over Population) கருதப்படுகிறது. நாளைய தினம் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதுப்புது வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக (Under population) கருதப்படும் நிலை ஏற்படக்கூடும்.

அதே போல மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகளை விட மக்கள் தொகை குறைந்துவிட்டால் அது பேராபத்தில் முடிந்து விடும் என்ற கணிப்பும் இருக்கின்றன. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் காரணமாக உழைக்கும் மகளின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வெடுக்கும் மூத்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இவையனைத்தும் எதிர்காலத்தில் நிலவும் சமூக, பொருளாதார, இயற்கை சூழலைப் பொறுத்தது. இன்றைய சூழலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொகை ஒரு நாட்டிற்குச் சொத்தா? அல்லது சுமையா? என்றால் தொழிலாளர்களின் தேவை பெருமளவில் இருக்கும். சில நாடுகளுக்கு வேண்டுமானால் அது இருக்கிறது என்பதே உண்மை. அதன் பொருட்டே சிறுகுடும்ப நெறியை பின்பற்றுவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் உதவிகளையும் அளிக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com