தலிபான்களுக்கு பாக்கிஸ்தான் உளவுப் பிரிவு (ISI) உதவி புரிகின்றமை அம்பலமாகிறது.
அமெரிக்க அரசை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் வகையில், ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான் தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ஐஎஸ்ஐ தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கான புலனாய்வு ஆதாரங்களை இணைய தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒழித்துக்கட்டுவதற்காக, அவர்களை எதிர்த்து போராட தனது படைகளையும், நேட்டோ படைகளையும் களமிறக்கிவிட்டுள்ளது அமெரிக்கா.
இதற்காக பல மில்லியன் டாலர்களை கொட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்த போரில் தங்களுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுக்கும் " பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் ஏராளமாக நிதியுதவியும், ஆயுத உதவியும் செய்து வருகிறது.
பாகிஸ்தானும் அமெரிக்காவிடமிருந்து இத்தகைய உதவிகளை பெற்றுக்கொண்டு, மறுபுறம் தனது உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை தாலிபானுக்கு உதவ அனுமதித்துள்ளது.
அமெரிக்க படையினரை எதிர்த்து போராடும் தாலிபான்களுக்கு பல்வேறு யோசனைகள் மற்றும் நிதியுதவிகளை அளிப்பதோடு, அடிக்கடி ஆப்கான் சென்று தாலிபான் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் அரசும் பரிபூர்ண அனுமதி அளித்துள்ளது.
இவற்றையெல்லாம் நிரூபிக்கும் புலனாய்வுதுறையினர் திரட்டிய சுமார் 92,000 ஆவணங்களில் ஒரு பகுதியை, "விக்கிலீக்ஸ்" ( WikiLeaks) என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது.
இந்த இணைய தளம் இதனை வெளியிடுவதற்கு முன்னதாகவே, அதன் நகல்கள் "த நியூயார்க் டைம்ஸ்", பிரிட்டன் நாளிதழான "கார்டியன்" மற்றும் ஜெரன் வார ஏடான " டெர் ஸ்பைஜெல்" ஆகிய பத்திரிகைகளுக்கும் கிடைத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐஎஸ்ஐ - தாலிபான்கள் இடையேயான தொடர்பை நிரூபிக்கும் தகவல்கள் வெளியில் கசிந்தது குறித்து அமெரிக்கா மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. ஏனெனில் இப்படி ஒரு தொடர்பு இருப்பது தெரிந்தும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து இராணுவ மற்றும் நிதியுதவி அளிப்பது ஏன் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
0 comments :
Post a Comment