Wednesday, July 7, 2010

ஜேர்மனிய அரசாங்கத்திற்கு நெருக்கடி தீவிரமாகிறது. By Stefan Steinberg

ஜேர்மனிய ஆளும் உயரடுக்கின் தட்டுக்கள் கடந்த வார ஜனாதிபதித் தேர்தலை சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலுக்கு ஒரு எச்சரிக்கை விடுப்பதற்குப் பயன்படுத்தின: சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தி, நாட்டின் உயரடுக்கின் சலுகைகளை காப்பாற்று, இல்லாவிடில் உங்களையும் உங்கள் அரசாங்கத்தையும் நாம் அகற்றிவிடுவோம் என்பதே அது.

சமீபத்திய மாதங்களில் கன்சர்வேட்டிவ் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஆகியவற்றின் கூட்டணி அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாகப் பல பின்னடைவுகளை கண்டது. நிதிய வட்டங்கள், வணிக நலன்கள் மற்றும் செய்தி ஊடகத்தில் இருந்து மேர்க்கெல் (CDU) கிரேக்கக் கடன் நெருக்கடிக்கு அவருடைய தாமதமான பிரதிபலிப்பினால் விமர்சனத்தை எதிர்கொண்டார். அது யூரோவிற்கு பெரும் நெருக்கடிக்கு வழிவகுத்ததுடன் ஐரோப்பிய வங்கி மீட்புப் பொதிக்கு ஜேர்மனி கொடுக்க வேண்டிய தொகையையும் மிக அதிக அளவு உயர்த்திவிட்டது.

பில்லியன் சிக்கனப் பொதியை முன்வைத்ததற்காக மேர்க்கெல் தாக்குதலுக்கு உட்பட்டார். இது போலித்தன கணக்கீடுகளைக் கொண்டு உண்மையான சேமிப்புக்களை கொள்ளவில்லை. தொடர்ச்சியான சேமிப்பு நடவடிக்கைகள் பவேரியத்தளம் உடைய CSU வினால் குறைகூறப்படகின்றன. அது தன்னுடைய மாநிலத் தளத்தை கொண்ட வாக்காளர் தொகுப்பை திருப்திபடுத்த முயல்கிறது. FDP அதன் முக்கிய ஆதரவாளர்களுக்கு நிதிய முறையில் வெகுமதி கொடுப்பதில் அப்பட்டமான வழிவகையை கையாண்டதை அடுத்து அலையெனக் குறைகூறலை எதிர்கொண்டது.

ஒன்பது மாதங்களுக்கு முன்புதான் கூட்டாட்சித் தேர்தல்கள் முடிந்த பின் “ஒரு கனவு போன்ற உயர் கூட்டணி” என்று நாட்டின் வணிக உயரடுக்கினால் கருதப்பட்ட இக்கூட்டணி இப்பொழுது எப்படி மேலே செல்லுவது என்பது பற்றியும் வாக்காளர்கள், ஜேர்மனிய அரசியல் வகுப்பின் செல்வாக்கு நிறைந்த பிரிவுகள் இவற்றிடம் இருந்து ஆதரவில்லாமல் போய்விடக்கூடாது என்பதற்கும் பெரும் கருத்து வேறுபாடுகளில் உள்ளது. மேர்க்கெலின் பிரச்சினைகள் இரு மூத்த CDI நபர்கள் இழப்பினால் மோசமாயின; செல்வாக்குப்படைத்த மாநிலப் பிரதமர்களான ரோலண்ட் கொக் மற்றும் யூர்கன் ருட்கர்ஸ் இருவரும் சமீபத்தில் தங்கள் பதவியில் இருந்து விலகிவிட்டனர். இவர்கள் CDU வின் வலதுசாரியைச் சேர்ந்தவர்கள், கட்சித் தலைமைக்கு மேர்க்கெலின் போட்டியாளர்களாக வரும் திறனைக் கொண்டவர்கள் என்று கருதப்பட்டிருந்தனர். இருவருமே கட்சியின் பரந்த பிரிவுகளில் ஆதரவைக் கொண்டிருந்தனர். கட்சியோ குறிப்பிடத்தக்க வகையில் மேர்க்கெல் மீது இணைப்போ, பாசத்தையோ கொண்டிருக்கவில்லை.

இதன் பின், ஒரு மாதத்திற்கு முன்பு மேர்க்கெல் விவாதத்திற்குரிய ஜேர்மனிய ஜனாதிபதி ஹொர்ஸ்ட் ஹொலரின் இராஜிநாமாவை எதிர்கொண்டார். அவர் மேர்க்கெல் மற்றும் CDU விரும்பிய வேட்பளாராக இருந்தவர். தன்னுடைய இராஜிநாமாவிற்கான உண்மையான காரணங்கள் பற்றி ஹோலர் நிதான மௌனம் காத்தாலும், அவர் நீங்கியது அரசியல் வர்ணனையாளர்களால் அரசாங்கத்திற்குள் இருக்கும் ஒற்றுமையின்மையின் மற்றொரு அடையாளமாக உணரப்பட்டது.

லோயர் சாக்சனி மாநிலத்தின் மந்திரி-தலைவர் கிறிஸ்டியான் வொல்ப் விரைவில் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது அரசாங்கம் நிலைமையை மாற்றுவதற்குக் கொண்ட முயற்சியாகும். ஆனால் கடந்த புதனன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் கூட்டணியிலுள்ள நெருக்கடியை அடிக்கோடிட்டுக்காட்டத்தான் உதவியது.

ஜேர்மனிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் கூட்டாட்சிச் சட்டமன்றத்தில் கூட்டணிக் கட்சிகள் கணிசமான பெரும்பான்மை பெற்றுள்ளன என்ற உண்மை இருந்தபோதிலும், கூட்டாட்சிக் கட்சிகளின் தலைமை கட்டுப்பாட்டை நிலைநிறுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அரசாங்க முகாமில் இருந்து 44 பிரதிநிதிகள் வொல்பிற்கு முதல் சுற்று வாக்களிப்பில் தேவையான பெரும்பான்மையை கொடுக்க மறுத்தனர். இறுதியில் இரகசிய வாக்கெடுப்புக்களில் மூன்று சுற்றுக்கள் நடத்தப்பட்டு, ஒன்பது மணி நேரம் கடந்த பின்தான் வொல்ப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வுல்ப் பின்னர் சாதாரணப் பெரும்பான்மை போதும் என்றாலும், அறுதிப் பெரும்பான்மையினால் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்க முகாமில் 44 பிரதிநிதிகள் கொடுத்த தகவல் தெளிவாயிற்று: “வொல்பின் பிரதிநிதித்துவத்திற்கு எதிரானதாக நாங்கள் இல்லை; முதல் சுற்றிலேயே அவரைத் தேர்ந்தெடுத்திருப்போம். ஆனால் எங்கள் முன்னுரிமை மேர்க்கெலின் தலைமைக்கு எங்கள் விரோதப் போக்கைக் காட்டுவதுதான். “CDU பின்னிருக்கை உறுப்பினர் ஒருவர், பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டபடி, “அது உண்மையில் பயங்கரமான நாள்தான். எதிர்த்தவர்கள் திரு.வொல்பிற்கு எதிராக வாக்களித்தது, அல்லது வாக்களிப்பில் கல்ந்தகொள்ளாதுவிட்டமை என்பவை உணர்வின் ஆழத்தைக் காட்டியது. தேர்தலே இன்னும் நான்கு வாரங்களில் மறக்கப்பட்டுவிடும். ஆனால் கூட்டணியின் பரிதாப நிலை மறக்கப்படாதது.”

அரசாங்கத்தின் “புதிய ஆரம்பம்” ஒரு சங்கடமாகத் தொடங்கிவிட்டது; ஏற்கனவே ஜேர்மனியச் செய்தி ஊடகத்தில், கூட்டணி முன்கூட்டியே முடிவிற்கு வரக்கூடும் என்பது பற்றிய விவாதம் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. Süddeutsche Zeitung பத்திரிகை, “இந்தக் கூட்டணி போல் தன்மீது இடர்பாடுகளைக் குறுகிய காலத்தில் சுமத்திக் கொண்ட வேறு எந்தக் கூட்டணியும் இருந்தது இல்லை…. கிறிஸ்டியான் வொல்ப் இறுதிச் சுற்றில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்னும் உண்மை கூட்டணியில் நலிந்த தன்மைக்கு அடையாளம் ஆகும். இந்தப் பேரழிவு கொண்ட கூட்டணிக்கு கிட்டத்தட்ட எதுவுமே சரியாக நடப்பதில்லை. இத்தகைய நிலமை இயல்புதான் என்று கருதுபவர்கள் கூட்டாட்சி சட்டமன்றத்தில் ஒன்பதரை மணி நேரத்திற்குப்பின் சான்ஸ்லர் உளமாரச் சிரித்து விளைவு “திருப்தி” என்று கூறியதைப் போல் நகைக்கலாம். ஆனால் அத்தகைய கணங்களில் அங்கேலா மேர்க்கெல் வீட்டின் மற்ற பகுதிகளை சேற்று வெள்ளம் இழுக்கையில் கதவுக் குமிழை உறுதியாகப் பிடித்திருந்தது போல் தோன்றினார்” என்று காரசாரமாக எழுதியது.

கன்சர்வேடிவ் FAZ நாளேடு ஜனாதிபதித் தேர்தலை “மேர்க்கெலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்” என்றும் அவர் இப்பொழுது அரசாங்கத் திட்டத்தை செயல்படுத்தப் போதுமான அரசியல் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்றும் விவரித்தது. FAZ கருத்துப்படி “இப்பொழுது ஒவ்வொரு கொள்கைப் பிரச்சினையும் அதிகாரப் பிரச்சினயாகிவிட்டது.”

மேர்க்கெல் அரசாங்கத்தின் வருங்கால நிலை பற்றிய ஊகம் பொதுத் தொலைக்காட்சி நிலையம் ARD நடத்திய கருத்துக் கணிப்பினால் அதிகமாயிற்று; அதன்படி வாக்களித்த 68 சதவிகித ஜேர்மனியர்கள் ஜனாதிபதித் தேர்தல் மேர்க்கெலுக்கு ஒரு “இழிவு” என்று நம்பினர்; 77 சதவிகிதத்தினர் தன்னுடைய ஆளும் கூட்டணி மீதே அவர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக அறிவித்தனர். 62 சதவிகிதத்தினர் மேர்க்கெலின் அரசாங்கம் அதிக நாட்கள் நீடிக்காது என்ற நம்பிக்கையைத் தெரிவித்தனர்.

வார இறுதியில் மேர்க்கெல் தைரியமாகத் தோன்றும் விதத்தில் தன்னுடைய அரசியல் திட்டத்தில் இருந்து தான் வளைந்து கொடுப்பதாக இல்லை என்று அறிவித்தார். அரசாங்கத்தின் திட்டமிடப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது. அடுத்த வாரம் மந்திரிசபையின் இசைவைப் பெற உள்ள வரவு-செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் பற்றிக் கணிசமான விவாதங்களை கொள்ளும். CSU வில் முக்கியமான உறுப்பினர்கள் செல்வந்தர்கள், வங்கிகள், பெரும் வணிகங்கள் ஆகியவை முற்றிலும் பாதிப்பு இல்லாமல் போய்விடும் என்ற உணர்வை அகற்றும் விதத்தில் மாறுதல்கள் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அரசாங்கம் கவனிக்க வேண்டிய உடனடிப் பிரச்சினைகளின் பட்டியல் பெருகுகிறது. முதலில் சுகாதாரப் பணிச் சீர்திருத்தம் உள்ளது; ஏனெனில் கடந்த வாரம் ஜேர்மனியின் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த ஆண்டிற்குப் பெரும் பற்றாக்குறைகளை அறிவித்து, சில நலிந்த நிறுவனங்கள் திவாலாகக்கூடும் என்ற அச்சுறுத்தலையும் கூறியுள்ளன. கடந்த வியாழன் நடைபெற்ற மந்திரிசபைக் கூட்டத்தில் ஒன்றியக் கட்சிகள் மற்றும் FDP யின் சுகாதாரப் பிரிவு வல்லுனர்கள் 2011 க்குள் 11 பில்லியன் யூரோ பற்றாக்குறையை ஈடுகட்டும் கூட்டு மூலோபாயத்திற்கு உடன்பாடு காணவில்லை. FDP யின் சுகாதார மந்திரி பிலிப் ரோஸ்லர் அனைவரும் ஒரே அளவு பணம் செலுத்தப்படத்துவது அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்கிறார், ஆனால் CSU இதைக் கடுமையாக எதிர்க்கிறது.

கூட்டணிப் பங்காளிகளில் வேறுபாடுகள் இருக்கும் மற்றப் பிரச்சினைகளில் அணுசக்தி நிலைங்கள் மூடப்படுவது என்பதற்கு இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ள 2021 என்ற காலக்கெடு விரிவாக்கப்பட வேண்டும் என்பதும் அடங்கியுள்ளது. CSU, FDP இரண்டும் CDU ஆதரிக்கும் காலக்கெடுவை எதிர்க்கின்றன. மேலும் CSU வின் பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடோர் சூ கூட்டன்பேர்க் முன்வைத்துள்ள ஒரு நேர்த்தியான முழுநேர இராணுவத்திற்கு ஆதரவாக இராணுவத்திற்கு கட்டாய சேவைக்கான தேர்ந்தெடுப்பு அகற்றப்படலாம் என்னும் இத்திட்டத்திற்கும் எதிர்ப்பு உள்ளது. FDP இத்திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தாலும் CDUவில் பலர் எதிர்க்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலின் ஒரு விளைவு இடது கட்சியை (Die Linke) கட்டுப்படுத்தி ஒருவேளை ஒரு வருங்கால அரசாங்கக் கூட்டணிக்கும் அதை இணைக்கும் நோக்கம் ஆகும். வொல்ப் முதல், இரண்டாம் சுற்றுக்களில் போதுமான வாக்குகளைப் பெறுவதில் தோல்வி அடைந்தததை அடுத்து, சமூக ஜனநாயக கட்சி, பசுமைவாதிகளின் தலைமை முன்னாள் தலைவர் ஒஸ்கார் லாபோன்டைன் உட்பட இடது கட்சியின் முக்கிய தலைவர்களை, சமூக ஜனநாயக கட்சி பாராளுமன்ற பிரிவுத் தலைவர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் இரகசிய கூட்டம் ஒன்றிற்கு அழைத்தார். பசுமைவாதிகள் மற்றும் சமூக ஜனநாயக கட்சி தங்கள் வலதுசாரி, கம்யூனிச எதிர்ப்பு வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கொடுத்த அழுத்தத்தை அடுத்து, இடது கட்சித் தலைவர்கள் சமரசத்திற்கு உடன்பட்டு தங்கள் வேட்பாளரை மூன்றாம் சுற்றில் இருந்து அகற்ற ஒப்புக் கொண்டு அவர்களும் வாக்களிப்பில் கல்ந்துகொள்ளாமல் போயினர்.

வாக்களிப்பு முடிந்தவுடன் இடது கட்சி சமூக ஜனநாயக கட்சி, பசுமைக் கட்சியினர் முக்கிய உறுப்பினர்களால் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்காததற்கு சாடப்பட்டது. ஆனால் இடது கட்சியின் விடையிறுப்பு முதல் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி இரண்டும் தங்களைப் பேச்சிற்கு அழைத்ததே ஒரு சாதகமான அடையாளம் என்று விடையிறுத்தது. சமீபத்திய Der Spiegel பதிப்பில் சமூக ஜனநாயக கட்சித் தலைவர் சிக்மார் காப்ரியேல் இடது கட்சிக்கு அழைப்பு விடுத்து ஒரு முன்னாள் சமூக ஜனநாயக கட்சிப் பிரிவுடனும் தொழிற்சங்க கருவியுடனும் முன்னாள் கிழக்கு ஜேர்மனிய ஸ்ராலினிசக் கட்சியான PDS உடன் “வருங்காலத்தை எதிர்கொள்வதற்கும், கடந்த காலத்தைப் புகழ்வதை நிறுத்தி” கூட்டணி ஒன்றை ஏற்படுத்தியது என்றும் இதற்கு “கட்சி சமூக ஜனநாயக கட்சியுடன் மாநில, கூட்டாட்சித் தரத்தில் உடன்பாடுகளை காண பொதுக் கருத்துக்களைக் கொண்டுள்ளது என்று கூறினார்” எனத் தெரிவித்துள்ளது.

ஜேர்மனிய ஆளும் உயரடுக்கின் ஒரு பிரிவு அதன் கடுமையான கொள்கையை சிறப்பாகச் செயல்படுத்த, சமூக ஜனநாயக கட்சியை அதன் நெருக்கமான தொழிற்சங்க பிணைப்புக்களுடன் அரசாங்கத்திற்குள் இழுத்துக் கொள்ள விரும்புகிறது. சமூக ஜனநாயக கட்சி பற்றி நப்பாசகளுக்கு முரசுகொட்டும் இடது கட்சியின் சிறந்த முயற்சிகள் இருந்தும், ஒரு சமீபத்திய Infratest கருத்துக் கணிப்பு வாக்களித்தவர்களில் 19 சதவிகிதம்தான் சமூக ஜனநாயகத்தினர் தலைமையிலான கூட்டணி தற்போதைய கூட்டணியை விடச் சிறந்து செயல்படும் என்று கூறியது. 73 சதவிகிதத்தினர் நிலைமை இதேபோல் அழிவைத்தான் கொண்டிருக்கும் என்றும் அல்லது சமூக ஜனநாயக கட்சி அரசாங்கம் இருந்தால் இதைவிட மோசமாகப்போகும் என்றும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment