ஏவுகணை மறிப்பு ஏவுகணைச் சோதனை வெற்றி.
எதிரி நாட்டு ஏவுகணையை விண்ணில் மறித்து அழித்தொழிக்கும் ஏவுகணை பாதுகாப்புத் திரை திட்டத்தின் (Ballistic Missile Defence - BMD)கீழ், இலக்கை நோக்கி தொடுக்கப்பட்ட ஏவுகணையை இந்தியா தயாரித்துள்ள அதிநவீன விண் பாதுகாப்பு ஏவுகணை (Advanced Air Defence - AAD) இடைமறித்துத் தாக்கி அழித்தது.
ஒரிசா மாநிலத்தின் கடற்கரைக்கு அருகிலுள்ள வீலர் தீவுகளில் இருந்து புறப்பட்ட விண் பாதுகாப்பு ஏவுகணை, சந்திப்பூர் தீவிலிருந்து தாக்க விடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த பிருதிவி ஏவுகணையை விண்ணிலேயே இடைமறித்துத் தாக்கி அழித்தது.பூமியிலிருந்து 20 கி.மீ. உயரத்திற்கும் குறைவான தூரத்தில் இந்த இடைமறித்தல் நிகழ்ந்ததாக சோதனைக் கள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. ஏவுகணைகளுக்கு எதிராக இந்தியா உருவாக்கிவரும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் முக்கியமானதாக இந்த விண் பாதுகாப்பு ஏவுகணை கருதப்படுகிறது.
ஏவுகணை மறிப்பு ஏவுகணைச் சோதனை இதுவரை நான்கு முறை நடந்துள்ளது, இதில் மூன்று முறை வெற்றிகரமாக விண் பாதுகாப்பு ஏவுகணை, எதிர் ஏவுகணையை விண்ணிலேயே இடைமறித்து தாக்கியழித்தது.
2006ஆம் ஆண்டுமுதல் இந்த ஏவுகணை மறிப்பு சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தொடர்ந்து நடத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2009ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணை மறிப்பு சோதனையின் போது இலக்கை நோக்கி வந்த எதிர் ஏவுகணையை, 70 முதல் 80 கி.மீ. உயரத்தில் விண் பாதுகாப்பு ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment