ஐ.நா. கொழும்பு அலுவலகத்தில் வழமையான பணிகள் ஆரம்பமாகும் சாத்தியம்.
நியூயோர்க் அழைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி நீல்பூனே ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஷேட செய்தியுடன் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வருகைதரவுள்ளதாகவும் அவர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்திக்கவிருப்பதாகவும் இருதரப்பு வட்டாரங்களில் இருந்தும் தெரியவருகிறது.
மனிதஉரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் பற்றி இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்கவென ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட விஷேட நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதைக் கலைக்க வலியுறுத்தியும் கொழும்பு ஐ.நா.அலுவலகத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் போன்ற சூழ்நிலைகளால் அது குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்கென நீல்பூனேயை ஐ.நா.செயலாளர் நாயகம் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைத்திருப்பதாக ஐ.நா.செய்தி நிலையம் ஐ.நா.செயலாளர் நாயகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி கடந்த 8 ஆம் திகதி தகவல் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே நியூயோர்க்கிற்கு அழைக்கப்பட்டிருந்த நீல்பூனே இலங்கையில் அவரது பதவிக்காலம் முடிந்து விட்டமையால் திரும்பிவரமாட்டாரென தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் நீல்பூனே கொழும்புக்குத் திரும்பிச் செல்வாரென ஐ.நா.இணைப்பேச்சாளரான பர்ஹான் ஹக் தெரிவித்திருந்தார்.
அது மட்டுமல்லாது, ஐ.நா.செயலாளர் பான் கீ மூனின் செய்தியுடன் நீல்பூனே கொழும்பு வரவுள்ளதாகவும் பர்ஹான் ஹக் கடந்த வெள்ளிக்கிழமை நிருபர்களுக்குத் தெரிவித்திருந்தார். நீல்பூனேயின் கொழும்பு வருகை தொடர்பாகத் தகவல் தெரிவித்த ஐ.நா.வின் கொழும்பு அலுவலக உயர் அதிகாரி ஒருவர் பூனே இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள தனது அலுவலகத்தில் பணிகளை ஆம்பிக்கவிருப்பதாக தெரிவித்தார்.
இதேநேரம், ஐ.நா.செயலாளர் நாயகத்தின் விஷேட செய்தியுடன் வரும் நீல்பூனே அரச தரப்பிலிருந்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்திக்கும் ஏற்பாடுகள் எதுவும் இருக்கிறதா என்று வெளிவிவகார அமைச்சிடம் வினவிய போது நீல்பூனே அமைச்சர் பீரிஸுடன் சந்திக்கும் சாத்தியங்கள் இருப்பதாக அமைச்சின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்தச் சந்திப்பின் பொருட்டு கொழும்பு ஐ.நா.அலுவலகத்திடம் இருந்து வெளிவிவகார அமைச்சிடம் அனுமதியொன்று கோரப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள ஐ.நா.அமைப்புகள் சிறப்பான முறையில் நடத்தப்படுவதற்கான எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை அரசாங்கத்திற்கும் ஐ.நா.வுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரந்தளவிலான உறுதிப்பாடுகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டுமென்ற ஐ.நா.செயலாளர் நாயகத்தின் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துவதுமான செய்தியுடனேயே நீல்பூனே கொழும்பு வருகை தரவுள்ளதாக ஐ.நா.இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment