Friday, July 23, 2010

நீதிமன்றத்தை விமர்சித்தார் என ஹக்கீம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி.

நீதிமன்றம் தொடர்பாக காணப்படும் நம்பிக்கை சீர்குலைந்திருப்பதாகவும் அந்த நம்பிக்கையை வெளிக்காட்டும் தன்மைகள் தற்போது காணப்படவில்லை எனவும் நீதிமன்றத்தை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என்பதை உடனடியாக ஆராய்ந்து அறியத்தருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாக்கீர் மாக்கார் நிலையத்தினால் கொழும்பு வெள்ளவத்தை மெராய்ன் ரைவ் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் உரையாற்றும்போதே நீதிமன்றத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்தக் கருத்தரங்கில் அமைச்சர் டியூ குணசேகர, மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் தலைவர் கரு ஜயசூரிய போன்ற அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.

நீதியரசர் சரத் என் சில்வாவின் பதவிக் காலத்திலேயே நீதித்துறை வீழ்ச்சியடைய ஆரம்பித்தது என ரவூப் ஹக்கீம் கூறியுளளார். உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் 17வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்ந்தும் மீறப்பட்டு வருவதால் நீதித்துறை தொடர்ந்தும் வீழ்ச்சியடையக் காரணமாகியுள்ளது.

17வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அரசியல்தரப்பில் பேச்சுவார்த்தைகள் ஏற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாக நீதித்துறை மீது நம்பிக்கை இழப்பதற்கும், வழிவகுத்துள்ள விதம் தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் நிறுத்த முடியாத நபர்கள் சிலர் உயர் நீதிமன்றம் நிரம்பிவழியும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் மூலம் நீதிமன்றத்தின் நட்பு வெளிப்பட்டிருப்பதாகவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நீதிபதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அழைப்பாணை விடுக்கப்படாத நிலையில் அடிப்படை உரிமை மனுவொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் வெளியாகியிருப்பதாகவும் ஹக்கீம் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com