Monday, July 19, 2010

புலிகளை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க வேண்டாம். FBI

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆஸ்திரேலியாவுக்குள் ஊடுருவ அனுமதிக்க வேண்டாம் என்று கோரி அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பீ.ஐ அமைப்பு ஆஸ்திரேலிய அரசை கோரி உள்ளது. ஆஸ்திரேலிய வார இதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தீவிரவாத போக்கு இயக்கங்களோ அல்லது இனப்பிரச்சினையை தூண்டும் அமைப்புகளோ இல்லை என ஆஸ்திரேலிய அரசு திட்டவட்டமாக அறிவித்து வருகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவின் கென்பரா நகரில் வசிக்கின்ற தமிழர்களால் புலிகள் மீள எழுவதற்கான உதவிகள் வழங்கப்படுகிறன என செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அகதி அந்தஸ்து கோரி வரும் இலங்கை தமிழர்கள் பலர் புலிகளுடன் தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர் என்று சில தரப்பினரால் குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் புலிகளை ஆஸ்திரேலியாவுக்குள் ஊடுருவ அனுமதிக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகள் என்ற இயக்கம் உலகின் மிகவும் தீவிரமான இயக்கம் என எப்.பி.ஐ இன் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. உலகெங்கிலும் வலையமைப்பை கொண்டிருந்த புலிகள் அமைப்பு தற்கொலை படையினர் என்ற பிரிவை உருவாக்கி அதனை கிரமமாக கையாண்டது எனவும் எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

அத்துடன் பெண்களை போருக்கு மிகவும் நேர்த்தியான முறையில் பயன்படுத்திய ஒரே ஒரு இயக்கம் இதுவே எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை எப்.பி.ஐ இன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இயங்கு கொண்டே இருக்கின்றது.

குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com