தமிழ் மக்களின் அழிவிற்கு புலம்பெயர் தமிழரின் செயற்பாடே காரணம். எரிக் சொல்கைம்
எரிக் சொல்கைம் வாயிலிருந்து உண்மைகள் வெளிவருகின்றது.
இலங்கை யுத்தத்தம் மற்றும் சமாதான பேச்சுக்களின்போது மிகவும் பிரபல்யாமாக பேசப்பட்டவரும் இலங்கை அரசு – புலிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளின் போது பிரதான மத்தியஸ்தராகவும் செயற்பட்டுவந்த நோர்வே அமைச்சர் எரிக் சொல்கைம் அவர்கள் இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அதிக அவலங்களை ஏற்படுத்துவதன் மூலம் தாம் நேசித்த தலைமையை பாதுகாத்துக்கொள்ள முடியுமென நம்பி புலம்பெயர் தமிழர்கள் அம்மக்களின் அழிவுகளில் பங்ககெடுத்துக்கொண்டுள்ளார்கள் என்ற பொருள்பட கடந்தவாரம் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்து இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளார். அத்துடன் எல்ரிரிஈ இறுதிநேரத்தில் சரணடையும் முடிவை எடுத்தபோது அது மிகவும் காலம் தாழ்த்திய முடிவாகி இருந்தது என்று கவலை தெரிவிக்கின்றார்.
எல்ரிரிஈ சரணடைவதன் மூலமே மனித அவலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் எனவும் கோரிக்கை உலகின் பல பாகங்களிலுமிருந்து முன்வைக்கப்பட்டிருந்தது. 2009 பெப்ரவரி அளவில் 2000க்கு உட்பட்டவர்களே கொல்லப்பட்டனர். ஆனால் அதற்குப் பின்னைய நாட்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு எல்ரிரிஈ இன் தலைமை கொல்லப்படுகின்ற இறுதி நேரத்திலேயே அவர்கள் சரணடைய முன்வந்திருந்தனர்.
எரிக் சொல்ஹைம் தனது நேர்காணலில் 'நாங்கள் எல்ரிரிஈ யை ஒழுங்குமுறையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி (சரணடையும்படி) கேட்டிருந்தோம். அப்படி நடந்திருந்தால் ஆயிரக்கணக்காண உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். இந்த யுத்தம் ஐக்கிய நாடுகள் சபை இந்தியா அமெரிக்கா மற்றும் சிலரின் கண்காணிப்புடன் நடைபெற்று இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.
தான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததாகவும் ஐநா பிரதிநிதிகள் வே பிரபாகரனுடக் தொடர்பில் இருந்ததாகவும் அனால் இரு தரப்பும் வேறு வேறு காரணங்களுக்காக யுத்தத்தை தொடர்ந்தனர் என்றும் எரிக் சோல்ஹைம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் மே 17 2009ல் புலிகளுடைய தலைவர்கள் பா நடேசன் எஸ் புலித்தேவன் ஆகியோரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்தார். எல்ரிரிஈ சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐசிஆர்சி ஐநா ஆகிய அமைப்புகளையும் கேட்டிருந்ததாகவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார்.
'(எல்ரிரிஈ இன் வேண்டுகோளை) நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம். எல்ரிரிக்கு அவர்களுடைய (சரணடையும்) கோரிக்கை மிகத் தாமதமாக வந்ததைத் தெரியப்படுத்தினேன். அவர்கள் சரணடைவதாக இருந்தால் வெள்ளைக்கொடியைத் தூக்கிக் கொண்டு சென்று சரணடையும்படி கூறினேன். ஆனால் சிறிது நேரத்தின் பின் அவர்கள் இறந்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டேன்' என எரிக் சொல்ஹைம் எல்ரிரிஈ, க்கும் தனக்குமான கடைசி உரையாடல்கள் பற்றிக் குறிப்பிட்டார்.
ஆனால் எரிசொல்ஹைம் எல்ரிரிஈ சரணடைய முன்வந்துள்ளனர் என்ற தகவலை இலங்கை அரசில் உள்ள யாரிடம் தெரிவித்தார் என்பதை வெளியிட மறுத்துள்ளார். மேலும் இந்த சரணடையும் பேச்சுவார்த்தையில் வேறு சிலரும் தொடர்புபட்டு இருந்ததாகவும் கூறியுள்ள சொல்ஹைம் அவர்களின் பெயரையும் வெளியிட மறுத்துள்ளார்.
'யுத்தத்தை மீள ஆரம்பிப்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்காது. யுத்தத்தில் விருப்பம் இல்லை என்பதை புலம்பெயர் தமிழர்களுக்கு சொல்கிறேன். ஆனால் தமிழர்களின் உரிமைக்கு சர்வதேச சமூகத்திடம் பாரிய ஆதரவு உண்டு' எனவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார். இலங்கை ஊடகங்கள் தன்மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
'இந்தியா இந்தோனேசியா மலேசியா நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை இலங்கையும் வழங்க முன்வர வேண்டும்' என்றவகையிலும் எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டு இருந்தார். 'தென்னிந்திய மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குப் பல உரிமைகள் உள்ளது. அரசியல் உரிமைகளுக்குப் பலமான ஆதரவு உள்ளது. ஆனால் யுத்தத்தை மீள ஆரம்பிக்க ஆதரவு இல்லை. இதுவே நோர்வேயின் நிலைப்பாடு. இதுவே உலகில் உள்ள பெரும்பாலான அரசுகளின் நிலைப்பாடும்' எனவும் சொல்ஹைம் தெரிவித்தார்.
தற்போது ஜநா வினால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவையும் வரவேற்று எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டார்.
இலங்கைத் தமிழர்களின் வரலாறு காணாத இந்த அழிவையும் அவலத்தையும் நிறுத்தியிருக்கக் கூடிய மட்டுப்படுத்தி இருக்கக் கூடிய வாய்ப்புகள் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் புலம்பெயர்ந்த தமிழ் தலைமைகளிடமும் இருந்தது. ஆனால் இவர்கள் தமிழ் மக்களின் அவலத்தை இன்னமும் தூண்டி விடுவதன் மூலம் சர்வதேச கவனத்தை திருப்பலாம் என்று வன்னி மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போயினர்.
இப்போது எந்த அரசாங்கத்திற்கு எதிராக இத்தலைமைகள் கடந்த 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அந்த அரசாங்கம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக கோசமிடுகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு வலிந்து தம் தலைமையைத் திணித்து இந்த அழிவை ஏற்படுத்தியதில் தமக்குள்ள பங்கு பற்றி மௌனமாகவே உள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகாலம் (சுதந்திரம் அடைந்தது முதல்) எதிரியாக கருதப்பட்ட வந்த அரசிடம் நியாயம் கேட்கும் தமிழ் தலைமைகள் தங்கள் தலைமைத்துவத்தின் வக்கற்ற அரசியலை தொடர்ந்தும் செய்வதற்காக தங்கள் தலைமையை தொடர்ந்தும் தக்க வைக்க இலங்கை அரசு மீது முழுப்பழியையும் போட்டுவிட்டு தாங்கள் தப்பிக்க இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்குப் பின் தாங்கள் பதுங்கிக் கொள்கின்றனர்.
வெள்ளம் வருமுன் அணைகட்டப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறப்படமுன் அதனை தடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் அர்த்தமற்றது.
1 comments :
அதுவே யதார்த்தம், அதுவே உண்மை. அதுவே உலக அபிப்பிராயம்.
அதை இன்றுவரைக்கும் பிரிந்து கொள்ள முடியாமல், தொடர்ந்தும் நித்திரையில் இருக்கும் புலன்பெயர் அறிவுக்கொழுந்துகள் எப்போது திருந்துவார்கள்?..
Post a Comment