Monday, July 19, 2010

இந்தியாவின் சிறப்பு தூதர் அவசியமில்லை. அமைச்சர் டலஸ் அழகப்பெரும.

தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து மெத்தனமாக செயற்பட்டுவருகின்றது. எனவே இலங்கைக்கு சிறப்புத் தூதுவரை அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் டல ஸ் அழகப்பெரும , இலங்கை தனது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி வருவதால் இங்குள்ள நிலைமை தொடர்பாக ஆராய இந்தியா சிறப்புத் தூதரை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவானது உலகிலேயே தலைசிறந்த உறவாகும் என்றும் கூறிய அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இடையே சிறந்த புரிந்துணர்வும் உறவும் காணப்படுகின்றது. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் கூட இந்தியா எமக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை.

அதாவது நெருக்கடிமிக்க காலகட்டத்தில் இலங்கை தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இந்தியா ஒருபோதும் தடையாகவும் செயற்படவில்லை. எனவே இந்தியாவுடனான எமது உறவானது உலகில் வேறு எந்த நாடுகளுக்கும் இடையில் காணப்படுவதையும்விட சிறந்த உறவாகும்.

இந்நிலையில் இலங்கை நிலைமை தொடர்பாக ஆராய இந்தியா சிறப்பு தூதுவரை இலங்கைக்கு அனுப்பவேண்டிய அவசியம் இல்லை என்றே நாங்கள் கருதுகின்றோம்.

காரணம் தமிழ் மக்கள் தொடர்பாக எமது பொறுப்பை நாங்கள் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றோம். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி போன்றவற்றில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

எனவே சிறப்பு தூதுவர் ஒருவர் வருவதற்கான தேவையில்லை. அண்மையில் கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டத்தை அரசாங்கம் நடத்தியது. இதன்மூலம் ஜனாதிபதி சிறந்த சமிக்ஞை ஒன்றை வெளிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு விரைவில் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கவுள்ளோம்.

அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவுள்ளோம்.உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலும் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவோம் எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com