அமெரிக்காவும் ரஸ்யாவும் உளவாளிகளை கைமாறிக்கொள்கின்றது.
அமெரி்க்காவில் 10 ரஷ்ய உளவாளிகள் பிடிபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், அவர்களை மீட்க ரஷ்யா கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தன் வசம் கைதிகளாக உள்ள அமெரிக்க உளவாளிகளை ஒப்படைக்க ரஷ்யா முன் வந்துள்ளது. அதற்குப் பதிலாக ரஷ்ய உளவாளிகளை ஒப்படைக்க அமெரிக்காவும் முன்வரும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக இரு நாடுகளின் வெளியுறவுத்துறையினர், அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ, ரஷ்ய உளவுத்துறையான கேஜிபி இடையே மிக மிக உயர் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த வாய்ப்பை நழுவவிட்டால் இரு நாடுகளிலும் சிக்கியுள்ள உளவாளிகளை இரு நாடுகளாலும் பரஸ்பரம் மீட்டுக் கொள்வது இயலாத காரியம் ஆகிவிடும் என்பதால் இதற்கு இரு நாட்டு அதிபர்களும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது.
இதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் பிடிபட்ட ரஷ்ய பெண் உளவாளியான அன்னா சாப்மேன் உள்ளிட்ட 10 பேரையும், குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வைத்துவிட்டு, அவர்களை ரஷ்யாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
பதிலுக்கு ரஷ்யா தன்னிடம் சிக்கி பல காலமாக சிறையில் உள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உளவாளிகள் 10 பேரை விடுவிக்கும் என்று தெரிகிறது.
இந்த உளவாளிகள் ஒப்படைப்பு இன்றே தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரஸ்பரம் உளவாளிகள் ஒப்படைப்பை மிக ரகசியமாக அரங்கேற்ற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
முதல்கட்டமாக ரஷ்ய சிறையில் உள்ள அமெரிக்க உளவாளியான இகார் சுட்யாஜின் என்ற அணு விஞ்ஞானி ரிலீஸ் செய்யப்படவுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 15 ஆண்டு சிறை தணடனை விதிக்கப்பட்டு, ரஷ்யாவின் ஆர்க்டிக் பனிப் பகுதியி்ல் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இவர் நேற்று ரகசியமாக மாஸ்கோ கொண்டு வரப்பட்டார்.
அதே போல பிரிட்டனுக்கு ரஷ்ய அணு ரகசியங்களை விற்ற செர்கேய் ஸ்கிரிபால் என்பவரும் மாஸ்கோவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந் நிலையில் அமெரிக்காவின் விர்ஜீனியாவில் பிடிபட்ட 10 ரஷ்ய உளவாளிகளில் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் நியூயார்க் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதே போல போஸ்டன் நகரில் பிடிப்பட்டு அந்த நகர சிறையில் இருந்த 2 பேரும் நியூயார்க் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மாஸ்கோவுக்கு கொண்டு செல்லும் திட்டத்துடனேயே அவர்கள் நியூயார்க்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களது வழக்குகள் அனைத்தும் நியூயார்க் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர்களை ஆஜர்படுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்துவிட்டு அமெரிக்கா விடுதலை செய்யவுள்ளது.
இந்த உளவாளிகள் ஒப்படைப்பை அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டு அரசியல் வெளிவிவகாரத்துறை இணையமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் ரஷ்யாவின் சார்பில் அந் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் செர்கெய் கிஸ்லயாக் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
அமெரிக்காவில் பிடிபட்ட ரஷ்ய உளவுப் பெண்ணான அன்னா சாப்மேன் அங்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய நாட்டின் நிதியுதவிடன் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளது போல நடித்து, பல்வேறு முக்கிய அமெரிக்க அதிகாரிகள் பணம், வீடுகள், வீட்டு மனைகள், செக்ஸ் உள்ளிட்டவற்றால் மடக்கிப் போட்டு, அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை கறந்து வந்துள்ளார்.
இரு நாடுகளிலும் உள்ள தங்களது உளவாளிகளை மீட்க இரு நாடுகளும் இதற்கு முன் பல வகைகளில் முயன்றுள்ளன. அதில் பரஸ்பரம் அவர்களை ஒப்படைத்துக் கொள்வதும் ஒன்று. ஆனால், இது வழக்கமாக மிக ரகசியமாக செய்யப்படும். இந்தமுறை தான் இது மிகப் பெரிய அளவில் வெளியில் கசிந்துவிட்டன.
0 comments :
Post a Comment