சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு பொதுமன்னிப்பு கிடையாது: இங்கிலாந்து
பிரிட்டனிலுள்ள சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாதென பிரிட்டன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வரும் கோடை காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத ஏனைய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்போவதாக பிரிட்டன் கூறியுள்ளது.
குறிப்பாக விசாவுக்காக போலியாக திருமணம் செய்திருப்போர் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்போவதாக 'த சண்டே டெலிகிராப்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் குடிவரவுத்துறை அமைச்சர் டாமியன் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை டாமியன் கிரினே மேற்பார்வை செய்து வருகிறார். போலித் திருமணங்கள் மற்றும் சட்டவிரோதப் பணியாளர்கள்,ஆட்களை சட்டவிரோதமாகக் கடத்திவருதல் என்பன உட்பட சட்டவிரோதக் குடிவரவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்போவதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து பிரிட்டனுக்குள் பிரவேசிக்கும் குடியேற்றவாசிகளை மட்டுப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் கோடை காலத்திலிருந்து அரசாங்கம் கடுமையாக மேற்கொள்ளுமென்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே நாட்டுக்குள்ளிருக்கும் கணிசமான தொகையான சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்தால் அவர்கள் வேலை செய்ய வேண்டும்.சட்ட ரீதியாக வரி செலுத்த முடியும் என்று சில கொள்கை வகுப்பாளர்கள் பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளனர்.
லண்டன் மேயரான பொரிஸ் ஜோன்சன் (கன்சர்வேட்டிவ் கட்சி) இத்தகைய பொதுமன்னிப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.ஆனால், டாமியன் அந்த மாதிரியான பொதுமன்னிப்பு வழங்கப்படுவதைத் திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத குடிவரவுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுப்பதே கூட்டணி அரசாங்கத்தின் இலக்கு என்று அவர் கூறியுள்ளார். அடுத்த தேர்தல் 2015 இல் இடம்பெறவுள்ளது.அச்சமயத்தில் குடிவரவானது பல்லாயிரக்கணக்கில் வீழ்ச்சி கண்டிருக்குமென அரசினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கத்தின் கீழ் பொதுமன்னிப்பு எதுவும் வழங்கப்படமாட்டாது. எனது லிபரல் ஜனநாயக சகபாடிகள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பிரிட்டனின் எல்லைகள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படவில்லையென்ற கருத்தை ஏனைய நாடுகள் கொண்டுள்ளன. நாட்டுக்குள் வந்துவிட்டால் இங்கு சுலபமாக இயங்க முடியும். சட்டவிரோதமாக தொழில் பார்க்க முடியும்.
உலகில் இது தொடர்பாகக் காணப்படும் அபிப்பிராயத்தை நாம் மாற்றவுள்ளோம். பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையேற்படுவதற்கு குடிவரவை கணிசமானளவு குறைக்க வேண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
...............................
0 comments :
Post a Comment