Saturday, July 17, 2010

இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்ப கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

இலங்கை தமிழருக்கான மறுவாழ்வு பணிகள் குறித்த உண்மை நிலையை அறிய அந்நாட்டுக்கு இந்தியாவின் சிறப்பு தூதர் ஒருவரை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்," தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருகிறது.

இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகள் எதிர்பார்த்த அளவு இல்லை.எனவே அங்கு சிறப்புத் தூதரை அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக நேற்று முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், இலங்கையில் தமிழ் சிறுபான்மை மக்கள் நிலைகுறித்து தாங்கள் எழுதிய கடிதத்திற்கு பெரிதும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் அங்கு வாழ்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமது அரசு உறுதியாக மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பான வாழ்க்கையை மீண்டும் கொண்டு வருவதில் இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் மன்மோகன்.

அத்துடன் இந்திய அரசு இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரசியல் தீர்வு தொடர்பான முயற்சியில், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கான நடைமுறைகளில் தங்களுடைய கருத்துகளையும், ஆலோசனைகளையும் பயன்படுத்திக் கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பிரதமர் அனுப்பிய கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, இன்று கருணாநிதி மேற்கூறிய கடிதத்தை அனுப்பியுள்ளார்.

முள்வேலி முகாம்களில் சிக்கி தவித்த தமிழர்களை திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய குழு இலங்கை சென்று, அங்குள்ள நிலையைக் கண்டு வந்து, அது தொடர்பான அறிக்கை ஒன்றையும் மத்திய அரசிடம் அளித்திருந்தது.

அந்த அறிக்கை மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தற்போது சிறப்பு தூதரை அனுப்பக்கோரி கடிதம் அனுப்பியுள்ளார் கருணாநிதி.

No comments:

Post a Comment