Tuesday, July 6, 2010

தமிழர் செய்த அதே அதேதவறை சிங்களவர் செய்யக்கூடாது. தயான் ஜெயதிலக

ஐ.நா விற்கான முன்னாள் நிரந்தர விதிவிடப்பிரதிநிதி தயான் ஜெயதிலக அவர்கள் அரசியல் யாப்பின் 13 வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் என தொடர்சியாக வலியுறுத்திவந்தவர். அவர் அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையொன்றில் „சிறுபான்மைச்சமூகம் விட்ட அதேதவறை பெரும்பான்மைச் சமூகமும் விடக் கூடாது.. தமிழ் தேசியவாதம் தனது இராணுவ வலிமையை தொடர்பாக தன்னை மிகைப்படுத்திக் கற்பனை செய்து கொண்டு விட்டது. சிங்களவர்களையும் சிங்கள ஆன்மாவையும் அது குறைத்து மதிப்பிட்டிருந்தது. விளைவாக அது ஒரு பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

அதேபோல் சிங்களவர்கள் தம்மைப் பற்றி மிகையாகக் கற்பனை செய்து கொண்டு தமிழர்களையும் அவர்களது ஆன்மாவையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.'

குறிப்பிட்ட கட்டுரையின் சாரம்சம் பூந்தளிர் இணையத்திலிருந்து..

இராணுவமாக இருந்த புலிகள் இலங்கை இராணுவத்தின் சிறந்த படையணிகளால் தோற்கடிக்கப்பட்டு பெருமளவிற்கு அழிக்கப்பட்டுமுள்ளார்கள். பிரிவினைவாதமென்பது ஒரு அரசியல் நிகழ்ச்சித் திட்டம். ஒரு கோட்பாடு. ஒரு எண்ணக்கரு. அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களோ, கோட்பாடுகளோ, எண்ணக்கருக்களோ இராணுவ வலிமையினால் தோற்கடிக்கப்பட முடியாதவை. அவை மிகச் சிறந்த அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களாலும், கோட்பாடுகளாலும், எண்ணக்கருக்களாலும் மட்டுமே தோற்கடிக்கப்படக் கூடியவை. நாங்கள் பகைமையுள்ள ஒரு இராணுவக் குழுவைத் தோற்கடித்து பிரிந்திருந்த பிரதேசங்களை மீளிணைத்து இந்தப் போரில் வெற்றியைப் பெற்றிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னமும் அரசியல் மற்றும் எண்ணக்கரு தொடர்பான போரில் வெற்றி பெறவில்லை. இசங்களின் இந்தப் போரானது இதயத்தோடும் மனதோடும் சம்பந்தப்பட்ட ஒரு போராகும்.

இலங்கையில் பிரிவினைவாதமென்பது பின்வாங்கியிருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் பலம் பொருந்திய பிரிவினைவாத இயக்கத்தால் அது இன்னும் வலுப் பெற்றிருக்கிறது. காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் மேற்கிலிருந்தது. குறிப்பாகக் கனடாவில் இருந்தது. எனினும் பஞ்சாப்பில் அது இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதோடு அதுவும் கலைந்து போனது. ஆனால் அவ்வாறு இங்கு தமிழ்ப் பிரிவினைவாதத்தில் நடைபெறவில்லை. ஏனெனில் இராணுவ வெற்றியைத் தொடர்ந்து நாங்கள் அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கவில்லை. பிரபாகரன் பிறப்பதற்கு முன்னரேயே பிரிவினைவாதம் இருந்து வந்திருக்கின்றது. பிரிவினைவாதத்தைத் தோற்கடிப்பதானால் பிரிவினைவாதம் வளர்வதற்கான காரணங்களை இல்லாதொழித்தல் வேண்டும். பிரிவினைவாதம் உயிர் வாழ்வதற்கான நிபந்தனைகளையும் இல்லாதொழித்தல் வேண்டும்.

அரசின் எண்ணத்திலிருந்தும் அரசியற் தோற்றப்பாட்டிலிருந்தும் பிரிவினைவாதம் பிறக்கிறது. ஒரு சிறிய உதாரணத்தினை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சோடி ஏன் பிரிகிறது. ஏனெனில் அவர்கள் சந்தோசமற்றவர்களாக இருப்பதனால். ஆகவே இந்தச் சிறிய தீவில் வாழும் பல்வேறு சமூகங்களும் மகிழ்ச்சியற்று இருப்பதற்கான காரணிகளை இல்லாதொழிக்க வேண்டும். போர் முடிவடைந்த பின்னர் எல்லா சமூகங்களும் அவர்களுடைய அடிப்படையான அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டு திருப்தியாக வாழும் வகையில் எங்களுடைய பார்வையை முன்னோக்கியதாக அமைத்தல் வேண்டும்.

அரசு கடும் அதிகாரத்தைப் (hard power) பாவிப்பதில் வெற்றி கண்டிருக்கிறது. அத்தோடு மென்மையான அதிகாரத்தையும் (Soft power) பாவிக்க வேண்டும். கடும் அதிகாரம் என்பது பலவந்தப்படுத்தப்பட்ட ஒரு வலுவாகும் அல்லது அதிகாரமாகும். அது இராணுவ பலத்தினால் பிரதியிடப்படும். மென்மையான அதிகாரம் என்பது ஒரு வகையில் கவர்ந்திழுத்தல் ஆகும். இரண்டையும் இணைத்துப் பயன்படுத்துவதை கெட்டித்தனமான அதிகாரம் (Smart power) என்பர். பிரிவினைவாதத்தை இங்கும் வெளிநாட்டிலும் நாங்கள் தோற்கடிக்க வேண்டுமானால், நாங்கள் கெட்டித்தனமான அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும். ஜனாதிபதி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை வெளிநாட்டமைச்சராக நியமித்தது ஒரு சிறப்பான நடவடிக்கையாகும். ஆனால் அது மட்டும் போதாது. ஏனெனில் நாங்கள் பிரிவினைவாதத்தை எதிர் கொள்வதற்கு தமிழ் மக்களைக் கவரக் கூடிய ஒரு பார்வையை உருவாக்க வேண்டும். கடும் அதிகாரத்தினால் அதைக் கட்டுப்படுத்துவது மட்டும் பயனளிக்கப் போவதில்லை.

புலம்பெயர் தமிழர்களிடையேயுள்ள பிரிவினைவாதம் இரண்டு வகையான அமைப்புக்களாக உள்ளது. ஒன்று பிரிட்டனில் உள்ள குளோபல் தமிழ் போரம். மற்றையது அமெரிக்காவிலும், சுவிஸ்சர்லாந்திலும் வேர் கொண்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். இவ்விரு பிரிவினரும் தங்களுடைய நோக்கத்திற்குத் தேவையான விடையங்களை ஓரளவு வினையாற்றலுடன் செய்து வருகிறார்கள். பிரிட்டனில் உள்ள தொழிற் கட்சிகளின் முக்கிய புள்ளிகளை அவர்கள் தம் பக்கம் வெள்றெடுத்திருக்கிறார்கள். தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பைப் பல இடங்களில் நடத்தி வருகிறார்கள். இந்நடவடிக்கைகளில் ஒரு சில ஆயிரக்கணக்கானவர்களே இடம்பெற்றிருந்தாலும் உலகம் முழுக்கத் தமது கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறார்கள். அரசாங்கங்களுடனும், அரசியற் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பல நாடுகளில் அவர்கள் நிழல் அரசாங்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

வெனிசுலாவைத் தம் பக்கம் வென்றெடுப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரிவினைவாதப் போக்கிற்கு ஆதரவாகக் கலை, ஊடகம் மற்றும் இளைஞர் கலாசாரம் போன்ற துறைகளிலுள்ள பல பிரமுகர்கள் இருந்து வருகிறார்கள். இவர்களுள் ரப் பாடகியான மாயாவும் ஒருவர்.

இன்னொரு மோதலுக்கான சாத்தியப்பாடுகள் எவை? நான்கு வகையான மோதல்கள் உருவாகக் கூடும் என எதிர்பார்க்கலாம். முதலாவதாக இலங்கை அரசுக்கெதிராக ஏற்கனவே ஒரு பனிப் போர் உருவாகியிருக்கிறது. இது ஏனைய நாடுகளிலிருந்தும், சர்வதேச நிறுவனங்களிலிருந்தும் இலங்கை மீதான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டாவதாக வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களிடமிருந்து வன்முறையற்ற வழியில் எதிர்ப்புகள் உருவாகக் கூடும். இது மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர்கிங் வழிமுறையிலானது. செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் ஏற்கனவே கடைப்பிடித்திருந்தது. அரசாங்கம் அல்லது அரச ஆதரவுப் படைகள் வன்முறையைப் பாவித்து இதனை அடக்க முனைந்தால் முன்னர் குறிப்பிட்ட சர்வதேச ரீதியான அழுத்தம் எங்கள் மீது அதிகரிக்கும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பினரும், ஜனாதிபதி ஒபாமாவின் உதவியாளருமான சமந்தா பவரின் வருகை வெள்ளை மாளிகையின் கண்காணிப்பு வலையத்திற்குள் நாம் இருப்பதைக் காட்டுகிறது.

மூன்றாவது விடுதலைப் புலிகள் தம்மை மீளிணைத்துக் கொள்ளல். தமிழ் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இலங்கை அரசாங்கம் சர்வதேச ஆதரவை இழந்திருக்கிறது. இந்த அடிப்படையில் அவர்கள் ஒன்றிணையக் கூடும். மீள ஒருமுறை தமிழ் நாட்டை அவர்கள் பின் தளமாகப் பாவிக்கவும் கூடும். அங்கிருந்து வடக்குக் கிழக்கிற்குள் நுழைந்து ஆங்காங்கு கெரில்லாத் தாக்குதல்களை மேற்கொள்ளவும் கூடும்.

நான்காவதாக அமைதி காக்கும் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்றின் பெயரிலோ அல்லது ஐ.நாவின் தீர்மானத்தின் அடிப்படையிலோ ஒரு வெளித் தலையீடு மேற்கொள்ளப்படும் சாத்தியமும் இருக்கிறது. ஜோர்ஜியாவில் என்ன நடந்ததென்பதைப் பாருங்கள். அத்தோடு சில வாரங்களுக்கு முன்பு ஈரானுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சீனாவும், ரஸ்யாவும் மேற்குலகோடு சேர்ந்து ஆதரித்து வாக்களித்தன. தமது வீட்டோ அதிகாரத்தை அவை பயன்படுத்தவில்லை. இதனையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று தமிழ்ப் பிரிவினைவாதம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. போர் வெற்றியையடுத்து உடனடியாக நாங்கள் பெரும் சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். நீதியானதும் பொருத்தமானதுமான ஒரு சமாதானத்தை நாங்கள் வந்தடையவில்லை அல்லது அதனை நோக்கி முன்னேறவில்லை என்றே சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் உள்ளது. அதனால்தான் இவ்வாறான எல்லாக் கேள்விகளும் எங்களை நோக்கி எழுப்பப்படுகின்றன.

நாங்கள் இப்போதும் கூட எங்களுடைய பெறுமதி மிக்க நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறோம். இப்போதும் கூட எங்களுக்கு நீண்டகாலமாக அறிமுகமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன் போன்றவர்களுடனேயே தொடர்பு கொண்டு வருகிறோம். அவர்கள் டக்ளஸ் தேவானந்தா போன்ற மிதவாதிகள் அல்லர். ஆனாலும் கூட அவர்கள் இன்னமும் மிதவாதிகள். நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களுடன் எங்களுக்கு ஒரு உடன்பாட்டிற்கு வர முடியாது போனால், நாங்கள் இவர்களைவிட இராணுவ ரீதியில் வல்லமை பொருந்திய தலைமைகளுடன் (more militant leadership) உடன்பாடு காண முயற்சிக்க வேண்டும்.

இன்றைய இந்தச் சூழலிலிருந்து விடுபட எங்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. தற்போதைய அரசியலமைப்பின் ஷரத்துக்களின்படி வடமாகாணத்தின் தேர்தலை நடாத்துதல் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் ஈபிடிபியுடனும் திஸ்ஸவிதாரணவின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்களை ஆரம்பித்தல்.

இவையிரண்டில் எதையாவது செய்யாமல் நாங்கள் எங்கள் மேலான போர்க்குற்றங்கள் தொடர்பான அழுத்தத்தை எதிர் கொள்ள முடியாது. இன நல்லிணக்கத்துக்கான அரசியல் நடவடிக்கைகளை வெளிப்படையாக மேற்கொண்டு வெளியுலகத்திற்குக் காட்டினால் தான் நாம் சர்வதேசத்தின் அழுத்தத்தை ஓரளவாவது குறைக்கலாம்.

நாங்கள் சர்வதேச பெரும்பான்மையை வென்றாக வேண்டும். சர்வதேச அபிப்பிராயம் என்ற போரில் நாங்கள் தோற்று வருகிறோம்.

கொள்கைகளும் பண்பும் போரை வெல்வதற்கு அவசியமானவையல்ல. அவை சமாதானத்தை வெல்வதற்குரியவை. நாங்கள் போரில் மட்டும் வெற்றியடைந்தவர்களாகக் கூடாது. சமாதானத்தில் தோற்காதவர்களாகவும் இருக்க வேண்டும். நாங்கள் சமாதானத்தை வெற்றி கொள்ள வேண்டும்.

இறுதியாக பிரிவினைவாதத்தை நாம் தோற்கடிக்க வேண்டுமாயின் அரசு பரந்து விரிந்தளவில் செயற்பட வேண்டும். எல்லாச் சமூகத்தினரையும் அதில் பங்குதாரராக்க வேண்டும். ஒவ்வொருவருடைய கூட்டு அடையாளத்தையும் கௌரவிக்க வேண்டும். இந்தச் சமூகங்களுக்கிடையில் அரசு நடுநிலையான ஒரு நடுவராகப் பணியாற்ற வேண்டும் இல்லாவிட்டால் எமது நடுவரின் தீர்ப்பு தமக்கு விரும்பிய ஒரு பெரும்பான்மைச் சமூகத்திற்கு பக்கச்சார்பான விதத்தில் வழங்கப்பட்டு விடும். இல்லாது விட்டால் பிரிந்து போவதற்கான அல்லது எதிர்ப்புக்கான நடவடிக்கைகள் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இதனால் சர்வதேசத்தின் மதிப்பை நாம் இழக்க நேரிடும்.

இலங்கை தனக்குச் சொந்தமான எல்லாச் சமூகத்தினரையும் எல்லாப் பிரஜைகளையும் நியாயமாக நடத்துகின்றதா என சர்வதேசம் பார்வையிடும்.எனவே எல்லோருக்கும் நியாயம் கிடைக்க வகை செய்தல் வேண்டும். ஒவ்வொருவருடைய இனத்துவமும் மதமும் மதிக்கப்படல் வேண்டும். எங்களுடைய போருக்குப் பிந்தைய ஒழுங்கு பௌத்த கண்ணோட்டத்தைக் கொண்ட ஒரு நடுநிலைமையான கண்ணோட்டமாக இருத்தல் வேண்டும். அரசு ஒருகையால் பிரிவினைவாதத்தை ஒடுக்கி இனரீதியிலான சமஷ்டியை நிராகரிக்கும் அதேநேரத்தில் மறுகையில் மத்தியமயப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். அது சிங்கள மற்றும் தமிழ் தீவிரவாதத்தை நிராகரிக்க வேண்டும். உலக வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்hவிட்டால் இராணுவ வெற்றியிலிருந்து கிடைக்கும் பழங்களை நழுவ விட வேண்டியிருக்கும். அரசாங்கம் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு விடயத்தையும் நேரடியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

நாங்கள் உலகத்தின் எல்லாத் தரப்பிடமிருந்தும் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இதேமாதிரியான பிரச்சினைகளை வெற்றிகரமாகக் கையாண்டவர்களிடம் எமது கொள்கை வகுப்பாளர்கள் பேசுவதற்குத் தயாராக வேண்டும்.ஆசிய பொருளாதார அற்புதம் (Asian economic miracle) எங்களைச் சூழ நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய உள்நாட்டுப் பிரச்சினையை நாங்கள் அரசியல் சமூக நல்லிணக்கம் மூலம் தீர்க்காமலிருந்தால் எம்மைச் சூழ நிகழும் அந்த ஆசிய பொருளாதார அற்புதத்திலிருந்து கிடைக்கும் இலாபங்களை எம்மால் அனுபவிக்க முடியாமற் போகும். ஒவ்வொரு சமூகமும் ஏதோ ஒரு அளவில் சாடவதேசத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்தத் தொடர்பை அச்சுறுத்தலாகப் பார்க்காமல் அவற்றை ஒரு வாய்ப்பாக ஒரு சொத்தாக ஒரு பாலமாக ஏன் நம்மால் பார்க்க முடியாதிருக்கிறது.

பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த தற்கொலைத் தாக்குதலிடம் பல சமூகங்கள் சரணடைந்தது போல எமது மக்கள் சரணடைய மறுத்துள்ளார்கள். எங்களுடைய மக்கள் எதிரியைத் தோற்கடிக்கக் கூடிய ஒரு அரசாங்கத்தை தெரிந்தெடுத்திருக்கிறார்கள். தாங்கள் கஷ்டப்பட்டாலும் போரிடுவதற்கு தொண்டர்களைத் தந்து அரசாங்கம் முன்னே செல்ல ஆதரவளித்திருக்கிறார்கள். இந்த விடயத்தைச் செய்து முடிக்கும் வரை. நாங்கள் புலிகளைத் தோற்கடித்தோம். ஏனெனில் அது மக்கள் யுத்தமாக இருந்தது. இப்போது எமது மக்கள் புலம் பெயர்ந்த தமிழர்களால் முன்வைக்கப்படும் அரியல் திட்டங்களை தொடர்ந்து நிராகரிக்க வேண்டும். எல்லா மக்களும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை எதிர்த்து நடுவிலுள்ள ஒரு பாதையை தெரிவு செய்ய வேண்டும்.

சிறுபான்மைச்சமூகம் விட்ட அதேதவறை பெரும்பான்மைச் சமூகமும் விடக் கூடாது.. தமிழ் தேசியவாதம் தனது இராணுவ வலிமையை தொடர்பாக தன்னை மிகைப்படுத்திக் கற்பனை செய்து கொண்டு விட்டது. சிங்களவர்களையும் சிங்கள ஆன்மாவையும் அது குறைத்து மதிப்பிட்டிருந்தது. விளைவாக அது ஒரு பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

அதேபோல் சிங்களவர்கள் தம்மைப் பற்றி மிகையாகக் கற்பனை செய்து கொண்டு தமிழர்களையும் அவர்களது ஆன்மாவையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

இரண்டு சமூகங்களுமே கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். முரண்பாட்டின் சுற்றுவட்டத்தில் அதேதவறு மீளவும் இடம் பெற அனுமதிக்கக்கூடாது. நாங்கள் பக்கங்களைப் புரட்டி புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டும். சிங்களவர்களும் தமிழர்களும் ஒருவரை ஒருவர் மதிக்கப் பழகிக் கொள்ளுதல் வேண்டும். எங்களுடைய இந்தச் சின்னஞ்சிறிய தீவில் அமைதியான சகவாழ்வுக்கான இடத்தை ஒருவருக்கொருவர் வழங்க வேண்டும். வேறு என்ன சாத்தியமான விடயங்கள் எங்கள் முன்னால் இருக்கின்றன?

நாங்கள் கடந்த காலத்தின் கைதிகளாக இருக்க முடியாது. நாங்கள் மூடுண்ட மனத்தினைக் கொண்டவர்களாக இருத்தலாகாது. திறந்த மனத்துடன் நாங்கள் இருத்தல் வேண்டும். நாங்கள் எல்லோரும் எங்களுடைய மக்கள், எங்களுடைய சமூகங்கள் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உணர்தல் வேண்டும். நாங்கள் எதிர்காலத்தை நோக்க வேண்டும். எங்களுக்கு எத்தகையதொரு எதிர்காலம் வேண்டுமென நாம் கற்பனை செய்ய வேண்டும். நாங்கள் தொடர்ந்து பல தசாப்தகாலமாக எல்லாவற்றையும் இழந்து வந்திருக்கிறோம். எனினும் அவற்றிலிருந்து 21 ஆம் நூற்றாண்டின் ஆசிய நவீனத்துவத்தை நோக்கி அணி நடை போடுவோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com