மரபணு சோதனை மூலம் இனி மனித வாழ்நாளை சொல்ல முடியும்
மரபணுக்களை வைத்து மிக விரைவிலேயே மனிதனின் இறப்பு நேரத்தையும், ஆயுட்காலத்தையும் முன் கூட்டியே சொல்லிவிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது குறித்து அமெரிக்காவின் போஸ்டன் மெடிக்கல் சென்டரில் உள்ள நியூ இங்கிலாந்து சென்டினேரியன் ஸ்டடி மையம் விரிவான ஆய்வை நடத்தியது.
நீண்டகாலம் வாழும் 1,000 பேரின் ஜீ்ன்களை (மரபணுக்கள்) மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நீண்ட காலம் வாழ்வோரிடையே வழக்கமாகக் காணப்படும் 150 ஜீன் ஜோடிகள் மார்க் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டன.
இந்த ஜீன்களின் ஆரோக்கியம், செயல்பாட்டை வைத்து ஒருவர் எத்தனை காலம் வாழ முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர். இதில் 77 சதவீத வெற்றி கிடைத்துள்ளது.
ஒருவரி்ன் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பதில் ஜீன்கள் முக்கிய பங்கு வகித்தாலும், சுற்றுச்சூழல், அவர் வாழும் சூழல் ஆகியவையும் முக்கிய பங்கு வகிப்பதை நாம் மறக்கக் கூடாது என்கிறார் இந்த ஆராய்ச்சி நிதியுதவி வழங்கிய ஏஜங் டிவிசன் ஆப் ஜீரியாடிரிக்ஸ் மையத்தைச் சேர்ந்த வினிபிரட் ரோஸ்ஸி.
நீண்ட நாள் வாழ உதவும் ஜீன்கள் உடலில் இல்லாதவர்களும் சிறப்பான வாழ்க்கை முறை, உடற் பயிற்சி மூலம் தங்கள் வாழ் நாட்களை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
முக்கியமாக உணவுக் கட்டுப்பாடு, சைவ உணவு, உடற் பயிற்சி, உடலுறவை கட்டுப்படுத்துதல், எல்லா சூழல்களிலும் மனதை ஒரே நிலையில் வைப்பது போன்றவை மிக முக்கியம் என்கிறார் ரோஸ்ஸி.
இதற்கிடையே சீனாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நீண்ட நாள் வாழ்வோரின் உடலில் குறிப்பிட்ட சில ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக சீரம் செலினியம், மேங்கனீஸ், இரும்பு, தாமிரம் ஆகியவை அதிகளவி்ல் இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.
0 comments :
Post a Comment