Saturday, July 17, 2010

வவுனியாவில் வீரமக்கள் தின நிகழ்வுகள்.

புளொட் அமைப்பினர் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நேற்றாகும். இதனை முன்னிட்டு நேற்றுமாலை உமாமகேஸ்வரன் சமாதியில் மௌனஅஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. செயலதிபர் உமாமகேஸ்வரன் சமாதி வளாகத்தில் மங்கல விளக்கேற்றல் நிகழ்வினைத் தொடர்ந்து, செயலதிபர் சமாதி மற்றும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மறைந்த புளொட் உறுப்பினர்களின் உருவப்படங்களுக்கு மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அஞ்சலிக்கூட்டமும் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், புளொட் மத்தியகுழு உறுப்பினர் பவன், புளொட் மத்தியகுழு உறுப்பினரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜீ.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட புளொட் முக்கியஸ்தர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம், வவுனியா நகரபிதா எஸ்.என்.ஜி.நாதன், சிறிரெலோ செயலாளர் உதயராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் உதயன், புளொட் உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

அஞ்சலிக் கூட்டத்தில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில், மே 19ற்குப் பின்னர் 30வருடகால யுத்தம் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் அரசியல் தீர்வு தொடர்பாக ஒரே கருத்தினை எட்டுவதற்கும், தமிழ் மக்களின் அவலங்களை போக்குவதற்கும் கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. தமிழ்க் கட்சிகள் ஒரே அமைப்பாக சேர்ந்து இயங்க முடியாவிட்டாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளிலாவது அனைத்து கட்சிகளும் கருத்தொருமைப்பாட்டுடன் ஒற்றுமையாக செயற்படவேண்டியது தற்போதைய நிலையில் அவசியமும் அவசரமுமாகிறது.

எனவே ஒரு சரியான தீர்விற்கான முயற்சிகளை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து முன்னெடுத்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காய் தமது இன்னுயிரை ஈந்த போராளிகள், பொதுமக்கள் அனைவரின் தியாகங்களையும் அர்த்தமுடையவையாக்க வேண்டும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வீரமக்கள் தின நிகழ்வுகள்.


புளொட் அமைப்பினரால் அனுஷ்டிக்கப்படும் வீரமக்கள் தின இறுதிநாளான நேற்றுக்காலை மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் புளொட் அமைப்பினரால் தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டு பிற்பகல் வரையில் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் மட்டக்களப்பு புளொட் அலுவலகத்தில் விளக்கேற்றல், மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகள் புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சூட்டி தலைமையில் இடம்பெற்றன. இதில் புளொட் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். அத்துடன் கரையாக்கன்தீவு காந்தி விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் உதைபந்தாட்ட போட்டியின் முதற்பரிசுக்காக உமாமகேஸ்வரன் ஞாபகக் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் நொச்சிமுனை பிரதேசத்திலும், நாவற்குடா விளையாட்டு மைதானத்திலும் சிரமதானப் பணிகளும் நேற்று இடம்பெற்றுள்ளன.

கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், முருங்கன் புளொட் அலுவலகங்களில் வீரமக்கள் தின நிகழ்வுகள்.
கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளிலுள்ள புளொட் தலைமை அலுவலகங்களிலும், கிளை அலுவலகங்களிலும் வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன. விளக்கேற்றல், மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி நிகழ்வுகளும், அஞ்சலிக் கூட்டங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் குறித்த மாவட்ட புளொட் அலுவலகங்களில் மறைந்த புளொட் உறுப்பினர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அப்பகுதி ஆலயங்களில் விசேட பூஜைகளும் நேற்று இடம்பெற்றுள்ளன.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com