கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது : அரசு கண்துடைப்பு அறிக்கை : எதிர்கட்சி கண்டனம்.
அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டம் காரணமாக பணியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஐ.நா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், ஐ.நா பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலமை இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்பதும், ஐ.நா பணியாளர்கள் எத்தனை நாட்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவார்கள் எனவும் தெரியவில்லை.
நுpலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இவ்விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேசப்படும் எனவும் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று நியூயார்க்கில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐ.நா. இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக், அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம் குறித்து ஐ.நா. தனது கடுமையான ஆட்சேபனையை இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
அரசாங்கம் தகவல் திணைக்கள அறிக்கை
ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில், எதிர்வரும் நாட்களில் கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவலகம் வழமைபோல் இயங்கும் என்று அரசாங்கம் நம்புவதாக தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டம் தொடரும் அதேவேளை அனுமதி பெற்றவர்கள் அலுவலகத்திற்கு செல்வது, அங்கிருந்து வெளியேறுவது போன்றவற்றுக்கு தடை இருக்காது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து உள்ளூர் மற்றும் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது என்று அறிக்கை கூறுகின்றது.
உள்ளூர் மட்டத்தில் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதால் அமைதியான முறையில் தங்கள் கருத்தை தெரிவிக்க விரும்புவோர் சுதந்திரத்தை மறுக்க முடியாது. இதன்படி அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் அனுமதி அளித்தனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடப்பாடுகளை முழுமையாக கருத்தில் கொண்டுள்ள அரசாங்கம் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி போதிய பாதுகாப்பை வழங்கியுள்ளது.
நேற்றைய பணிகள் முடிவடைந்ததும் ஐக்கிய நாடுகள் வளாகத்தினதும் அதற்குள் பணிபுரிந்தோரினதும் பாதுகாப்பு பொலிஸார் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அலுவலர்கள் சுதந்திரமாக அங்கிருந்து வெளியே செல்ல பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர்.
அநேகமான அலுவலர்கள் வெளியேறியதும் சில சிரேஷ்ட அதிகாரிகள் அலுவலகத்திற்குள்ளேயே இருந்தனர். இலங்கை குறித்து குழுவொன்று நியமிக்கப்படுவது பற்றிய தங்கள் உணர்வினை அதிகாரி ஒருவரை சந்தித்து வெளிப்படுத்த வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அங்கு சென்று இரு தரப்பினருக்குமிடையே பேச்சுவார்த்தையை நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களின் மன உணர்வை உள்ளிருந்த அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பு முடிவடைந்ததும் மீதமிருந்த அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறினர்.
ஐ.நா அலுவலகம் மீதான முற்றுகை: நாட்டுக்கு அவமானம் என்கிறார் ரணில்!
ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் மீது அமைச்சர் விமல் வீரவன்ஸவால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முற்றுகை நடவடிக்கை மிகவும் வெட்கக் கேடான விடயம் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அவர் இது குறித்து அங்கு மேலும் பேசுகையில் இந்த முற்றுகை நடவடிக்கையால் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் மிஞ்சி இருப்பவை கெட்ட பெயரும், அவமானமும் மாத்திரமேதான்,இந்த முற்றுகை நடவடிக்கை மூலம் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மீதான ஐ.நா நிபுணர் குழுவின் விசாரணைகளைத் தடுத்து விட முடியாது என்றார்.
ஐநா கொழும்பு அலுவலகம் முன்பு இடம்பெறும் ஆர்பாட்டமானது இலங்கைக்கு பாதகமான சில விடயங்களை தோற்றுவிக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்தன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
UNHCR போன்ற நிறுவனங்கள் இலங்கை சிறார்க்கு பல வழிகளில் உதவிகளை செய்து வருவதாகவும், இவ்வாறான ஆர்பாட்டங்களால் அவர்கள் செய்துவரும் உதவிகள் கூட இல்லாது போகலாம் எனவும் ஜயலத் ஜெயவர்தன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த, ஐநா சபைக்கும் இலங்கைக்கும் பிணக்குகள் கிடையாது எனவும் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தொடர்பிலேயே பிரச்சினை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment