Thursday, July 8, 2010

தவறுதலாக தானே சுட்டு்க் கொண்ட இந்திய தென் பிராந்திய கடற்படை தளபதி?

கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் துரோனாச்சாரியா தென் பிராந்திய கடற்படை தளத்தில் தென் பிராந்திய கடற்படை தளபதி 'ரியர் அட்மிரல்' எஸ்.எஸ்.ஜாம்வால் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது.

முதலில் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு பயிற்சியை அவர் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு குண்டு தவறி வந்து அவர் மீது பாய்ந்ததாகக் கூறப்பட்டது.ஆனால், இப்போது அவரது கையில் இருந்த துப்பாக்கியில் இருந்து தான் குண்டு பாய்ந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

வழக்கமாக துப்பாக்கி சுடும் பயிற்சியை பார்வையிட வரும்போதெல்லாம் அவரும் சில ரவுண்டுகள் சுட்டுப் பார்ப்பது வழக்கம் என்றும், நேற்று இன்ஸாஸ் வகை ரைபிள் துப்பாக்கியால் அவர் சில ரவுண்டுகள் சுட்ட ஜாம்வால், பின்னர் 9 மி.மீ. பிஸ்டல் ஒன்றை சுட்டு சோதனையிட முயன்றதாகவும், அப்போது அந்த துப்பாக்கி 'ஜாம்' ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அதன் கோளாறை அவர் சரி செய்ய முயன்றபோது, அந்த துப்பாக்கி வெடித்து குண்டு அவரது தலையில் பாய்ந்ததாகவும், இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியாகிவிட்டதாகவும் கொச்சி கடற்படைத் தளத்தின் கமாண்டர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இது தற்கொலை அல்ல என்றும் அவரை யாரும் சுடவில்லை என்றும் கூறியுள்ள கடற்படை உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நீர்மூழ்கிகளைத் தாக்குவதில் ஸ்பெஷலிஸ்டான ஜாம்வால், நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகளைத் தாங்கிய கப்பல் படையின் பிரிவுக்குத் தலைவராகவும் இருந்தவர். 1983ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியின் கடற்படைப் பிரிவு அதிகாரியாகவும் குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக குடும்பப் பிரச்சனையால் அவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இதை அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆயுதங்களைக் கையாள்வதில் எக்ஸ்பர்ட் ஆன ஜாம்வால், 'ஜாம்' ஆன துப்பாக்கியின் முனையை தனது தலையை நோக்கி வைத்துக் கொண்டு, அதன் கோளாறை சரி செய்ய முயல்வரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com