Tuesday, July 6, 2010

ஐ.நா அலுவலகம் முன்பாக விமல் வீரவன்ச ஆர்பாட்டம் : பான் கீ மூனின் கொடும்பாவி எரிப்பு.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு அலோசனை செய்வதற்கு என ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீ முனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை கலைக்குமாறு கோரி விமல் வீரவன்ச தலைமையிலானோர் இன்று கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கானோர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்பாட்டக்காரர்கள் திரு. பான் கீ முன் அவர்களின் பொடும்பாவியை தெருவழியாக கொண்டுவந்தனர். அவர்கள் பான் கீ முன் மீது வசை பாடி வந்துடன் அவரது பொம்மைக்கு அடியும் போட்டனர். இறுதியாக அவரது பொம்மை அங்கு எரிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா வின் கொழும்பு அலுவலகம் முன்பாக கூடியிருந்தபோது அங்கு பேசிய வீடமைப்புத் துறை அமைச்சர் விமல்வீரவன்ச இலங்கையில் பயங்கரவாதத்தை முறியடிக்க தலைமைத்துவம் வழங்கிய நாட்டின் தலைவருக்கு எதிராகவோ அன்றில் யுத்தத்தில் ஈடுபட்ட படையினருக்கு எதிராகவோ விசாரணை மேற்கொள்வதற்கு ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீன் முன் இற்கு அதிகாரம் கிடையாது என தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா வின் பொதுச் செயலாளர் அதன் அங்கத்துவ நாடுகளால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் இலங்கையில் உள்ள ஐ.நா சபையின் அலுவலத்திற்கான குடிதண்ணீர் பாவனைக்கான நிதிகூட இலங்கை அரசாங்கத்தால் செலவிடப்படும்போது ஐ.நா சபை தமக்கெதிராக செயற்படமுடியாது எனவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார்.

எது எவ்வாறாயினும் விமல் வீரவன்சவின் இச்செயற்பாடு சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பின்னடைவை கொண்டுவரும் என்பதில் எவ்வித சந்தேமும் இல்லை. ஐ.நா வின் அலுவலகம் முற்றுகையிடப்படும் என விமல்வீரவன்ச தெரிவித்திருந்தபோது , அவரது கருத்து தொடர்பாக கருத்துரைத்த ஐ.நா வின் பேச்சாளர் இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மன்னிப்புக்கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீரவன்சவின் இச்செயற்பாட்டினால் நாட்டுப்பற்றுள்ள புத்திஜீவிகள் பலரும் ஆத்திரமடைந்துள்ளனர். அத்துடன் வீரவன்சவின் இச்செயற்பாடானது இலங்கை அரசின் ஒப்புதல் பெறப்படாமல் நாடாத்தப்பட்ட ஒன்றல்ல எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment