இலங்கையில் தொழிலாளர் உரிமை மீறல் புகார்: ஆராய வருகிறது அமெரிக்கக் குழு
பல்வேறு உரிமை மீறல் குற்றச்சாற்றுக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை மீது தற்போது தொழிலாளர் உரிமை மீறல் புகாரும் எழுந்துள்ள நிலையில், அது குறித்து விசாரிப்பதற்காக அமெரிக்கக் குழு ஒன்று கொழும்பு வர உள்ளது. இலங்கையில் தொழிலாளர் உரிமைகள்மீறப்பட்டிருப்பதாக அமெரிக்க தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்திற்கு வெளிவிவகார அமைச்சும் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சும் தொழில் அமைச்சும் இணைந்து பதிலளிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
சுதந்திர வர்த்தக வலயப் பணியாளர்கள் ஒன்றியம், அமெரிக்க கைத்தொழில் அமைப்புகளின் சுதந்திரத் தொழிலாளர் கவுன்சிலுக்கு தொழிலாளர் உரிமை மீறல்கல் இருப்பதாக முறையிட்டதையடுத்து, அந்த அமெரிக்க தொழிற்சங்கம் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அமெரிக்க அரசு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி.+ சலுகைகள் விடயத்தில், இந்த விவகாரமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். தொழிலாளர் உரிமைகள் வேண்டுமென்றே மீறப்பட்ட விடயமாக முறைப்பாடு இருப்பதாகவும், சுதந்திர வர்த்தக வலயத்திற்குள்ள சங்கமானது ஒன்று சேர்ந்து பேரம் பேசும் உரிமையைத் தடை செய்திருப்பது குறித்து விசேடமாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் சுதந்திர வர்த்தக வலயப் பணியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் அன்டன் டி மார்க்கஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள்,துறைமுக ஊழியர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளமை பற்றி முறைப்பாட்டில் முன்னிலைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சங்கங்கள்,அரசாங்கம், தொழில் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உண்மையை ஆராய்வதற்காக அமெரிக்க அயலுறவு அமைசகத்தின் மூன்று உறுப்பினர்களடங்கிய குழுவினர் ஜூலை 31 ல் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.
அவர்கள் திரும்பிச் சென்ற பின்னர் அமெரிக்க அயலுறவு அமைசகத்தில் பகிரங்க விசாரணை இடம்பெறவுள்ளது என்று மார்க்கஸ் கூறியுள்ளார்.
இதேவேளை, சுதந்திர வர்த்தகப் பணியாளர்கள் ஒன்றியமானது அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களினால் நிதியளிக்கப்படும் அமைப்பெனவும், இலங்கையின் நற்பெயருக்கு சேறுபூசுவதற்காகவும் கைத்தொழில் துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தவும் நிதி வசதியளிக்கப்பட்ட அமைப்பென்றும் அமைச்சர் காமினி லொக்குகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
2008 இல் சுதந்திர வர்த்தக வலயப் பணியாளர்கள் ஒன்றியம் தாக்கல் செய்த முறைப்பாட்டை அமெரிக்க தொழிற்சங்கம் அலட்சியப்படுத்தி விட்டதாகவும், ஆனால், 2009 ல் மார்க்கஸ் இந்த விடயத்தை மீண்டும் எழுப்பியிருப்பதாகவும் அதாவது அமெரிக்க அயலுறவு அமைசகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கும் விடயத்தை மீண்டும் எழுப்பியிருப்பதாகவும் அமைச்சர் லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment