முன்னாள் கூட்டுப்படை தளபதியின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பலைகள் எழுகின்றது.
Yedioth Ahronoth என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும் தற்போதைய இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவருமான டொனால்ட் பெரேரா, "பலஸ்தீனர்கள் பேச்சுவார்த்தையை நிராகரித்தால் யுத்தத்தை இஸ்ரேல் தீவிரப்படுத்த வேண்டும் , அதற்கான முழு ஆதரவையும் இலங்கை வழங்கும்" என தெரிவித்திருந்த கருத்து பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன் பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் இணைத் தலைவரான அமைச்சர் அதாவுட செனவிரட்ண, டெய்லிமிரர் இணையத்தளத்திற்குக் கருத்துத் தெரிவிக்கையில், தூதுவர் டொனால்ட் பெரேரா என்ன கூறினாலும் இலங்கை அரசாங்கம் பலஸ்தீன மக்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல், பலஸ்தீனம் ஆகிய இருதரப்பினரையும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுமாறு வலியுறுத்துவதாகவும கூறினார்.
இதேவேளை, டொனால்ட் பெரேராவின் கூற்று, இலங்கை அரசாங்கத்தின் கருத்தை பிரதிபலிக்கிறதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்;டும் என பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் மற்றொரு இணையத்தலைவரான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு இத்தகைய பொறுப்பற்ற வகையில் கருத்துத் தெரிவிப்பதற்காக தூதுவருக்கு எதிராக பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் ஸ்தாபகத் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்துள்ளார்.
'இஸ்ரேல் இரட்டை வேடம் பூணுகிறது. இஸ்ரேல் ஒரே சமயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் உதவியளித்ததாக நூலாசிரியர் ஒருவர் எழுதியுள்ளார். எனவே டொனால்ட் பெரேரா போன்ற முன்னாள் படை அதிகாரிகள் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது.
பலஸ்தீன மக்கள் சுதந்திரம் கோருகிறார்கள். அவர்களுக்கு இலங்கை ஆதரவளிக்கிறது' எனவும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் மேலும் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களும் பயிற்சியும் பெற்றமைக்காக பலஸ்தீனத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பத்திரிகைக்கு ரொனால் பெரேரா வழங்கிய நேர்காணலில் பிரபாகரனின் உடலை பார்த்துவிட்டு வீடு சென்ற அவர் தனது சீருடையை கழற்றி வைத்துவிட்டு இப்போது ஒய்வு பெற லாம் என்ற முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.
அவர் வழங்கிய பேட்டியின் சாராம்சம் வருமாறு.
பாலஸ்தீன போராளிகள் பயங்கரவாதிகள் ஆவர். அவர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இலங்கை பரிபூரண ஆதரவு வழங்குகின்றது.
இப்படி இஸ்ரேலிய நாட்டு ஆங்கில பத்திரிகைக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை வழங்கி இருக்கின்றார் கடந்த வருடம் அரசு-புலிகள் ஆகியோருக்கு இடையிலான இறுதி யுத்தம் இடம்பெற்றபோது களத்தில் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டவரும் , இஸ்ரேலுக்கான இலங்கையின் இந்நாள் தூதுவருமான எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா.
அவர் அப்பேட்டியில் முக்கியமாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவராக பதவியேற்று இங்கு வருகின்றமைக்கு முன்பே எனக்கு இஸ்ரேலுடன் நல்ல பரிச்சயம் உண்டு. விமானப் படைத் தளபதியாகவும் இருந்தவன் என்ற வகையில் இஸ்ரேலின் விமானப் படையுடன் எனக்கு மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு.
இஸ்ரேல் எமது பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு பன்னெடுங்காலமாக உதவி செய்து வந்துள்ளது. தகவல் பரிமாற்ற உதவிகள், இராணுவ தளபாட விநியோக உதவிகள், இராணுவ தொழில் நுட்ப உதவிகள் ஆகியவற்றை இலங்கைக்கு வழங்கி வந்துள்ளது.
17 கிபீர் விமானங்கள், டபர் ரோந்து படகுகள் ஆகியவற்றை வழங்கி இருந்தது.இஸ்ரேலில் எமது விமானிகள் பயிற்சிகளைப் பெற்றனர். பல பில்லியன் டொலர்களை உதவியாக இஸ்ரேல் தந்திருக்கின்றது. எமது பயங்கரவாத்ததுக்கு எதிரான இஸ்ரேல் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளது.
ஏராளமான இலங்கையர்கள் இஸ்ரேலின் அபிமானிகளாக உள்ளனர்.புலிகள் இயக்கத்துக்கும் பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கும்(ஹமாஸ் இயக்கத்துக்கும்) இடையில் நிறையவே ஒற்றுமைகள் உண்டு .
இஸ்ரேலின் பாலஸ்தீன பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இஸ்ரேலுக்கு பலத்த பேராதரவை வழங்கி வருகின்றது. பாலஸ்தீன பயங்கரவாதிகள் நிபந்தனை அற்ற முறையில் பேச்சுக்கு வரத் தவறினால் இஸ்ரேல் முழு இராணுவ பலத்தையும் பிரயோகித்து கட்டாயம் சண்டையிட வேண்டும்.
இஸ்ரேலிய பொதுமக்கள் ஆதரவை இஸ்ரேலிய அரசு பெற்றுக் கொண்டு பாலஸ்தீன பயங்கரவாதிகளை வேரோடு அழிக்கும் வரை விடாமல் தொடர்ந்து போராட வேண்டும்.பின் வாங்கிச் செல்லவே கூடாது.
காஸா பகுதியில் துருக்கிக் கப்பல் மீது கடந்த மே மாதம் 31 ஆம் திகதி நடத்திய தாக்குதலைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் இஸ்ரேலை பொறுத்தளவில் அதற்கு அதன் தற்பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை முன்னாள் இராணுவ படை வீரன் என்ற வகையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நாடு என்கிற வகையில் இலங்கை பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகின்ற நாடுகளுக்கு எப்போதும் பேராதரவு வழங்கும்.
0 comments :
Post a Comment