Tuesday, July 27, 2010

இந்தியா தனது தேவைக்காக இலங்கைப் பிரச்சினையை கையாள்கின்றது.

முஸ்லிம் அரசியலில் மிகப் பெரிய சந்தேகங்கள் இருக்கின்றன. புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டாயிற்று. இனிமேல் தனித் தரப்பு என்ற கோசத்திற்கு இடம் கிடையாது. இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் தேவைக்காக மட்டும் அடிக்கடி பேசும் விடயமாகவுள்ளது. இங்கிருந்து இந்தியாவிற்கு படையெடுத்துச் சென்று பேசினாலும் இங்கு பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாகவே இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான் ரவூப் ஹக்கீம் கல்முனையில் நடை பெற்ற கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், எமக்குத் தனியான நிர்வாக அலகை இன்றைய அரசியல் சூழ்நிலையில் பெற்றுக் கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அங்கும் இங்குமாக எமது விவசாயக் காணிகளையும் இழந்துள்ளோம். புலிகளின் தோல்வியின் பின் வடக்கு கிழக்கிலே 40 ஆயிரம் ஏக்கர் முஸ்லிம்களின் காணி பெற்றுக் கொடுக்கப்படும் என இந்த அரசாங்கம் கூறியது.

ஆனால் இன்று எமக்கு ஏற்கெனவே இருந்த காணிகளையே பாதுகாக்க முடியாததாக நிலைமை உள்ளது. ஆரம்பத்திலே கரங்கோவில், மூதூர், கிண்ணியா என ஆரம்பித்து இன்று எல்லா இடங்களிலும் எமக்கு காணிப்பிரச்சினைகள் உள்ளன. எங்களின் காணிகளைப் பெற்றுக் கொள்வது என்பது சிக்கலான விடயமாகவுள்ளது. அரசாங்கத்தில் உள்ள சில சக்திகள் எமது விடயத்தில் கடும் போக்கை கொண்டிருப்பது தென்படுகின்றது

இந்தப் பிரச்சினைகளை முஸ்லிம் காங்கிரஸ் தான் பார்க்க வேண்டும் எனச் சொல்லுகின்றார்கள். அரசாங்கத்தின் தரப்பிலே உள்ளவர்களுக்கு இவை பற்றி பிரச்சினையில்லை. நாம் அரசாங்கத்தின் உள்ளே போனால் நாம் தான் இப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பார்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் பல கட்சிகளின் வீக்கம் வற்றியுள்ளது. ஜே.வி.பி. யை பார்த்தால் 38 ஆக இருந்த ஆசனங்கள் ஏழாகக் குறைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 21 ஆக இருந்தது 14 ஆகக் குறைந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸிற்கு 10 ஆக இருந்தது 8 ஆக குறைந்துள்ளது. இந்த அரசாங்கத்திற்கு வீக்கம்தான் என்றாலும் அதுவும் வற்றும் காலம் வந்து விடும்.

இப்போதைய நிலையில் எங்களைப் பொறுத்தவரை தேர்தல் முறையில் ஏற்படவிருக்கும் மாற்றம், நிர்வாக முறைகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் என்பன முக்கியமாகக் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் ஆகும் என்றார் .

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் யோசனைத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு இடையில் பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள சர்வகட்சிப் பேரவை அறிக்கையை ஒர் ஆரம்ப அறிக்கையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com