Saturday, July 3, 2010

அர்ஜெண்டினாவை வீழ்த்தியது, அரையிறுதியில் ஜெர்மனி

ஆட்டம் துவங்கிய மூன்றாவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்ட ஜெர்மனி அணி இறுதிவரை ஆதிக்கம் செலுத்தி மேலும் 3 கோல்களைப் போட்டு அர்ஜெண்டினா அணியை வென்று அரையிறுத்திக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரிலுள்ள கிரீன் பார்க்கில் சற்று முன் நடந்த முடிந்த மூன்றாவது கால் இறுதியில் இந்த உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கியுள்ள பலம் வாய்ந்த அணியில் முக்கியமானது என்று கூறப்பட்ட அர்ஜெண்டினாவை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஜெர்மனி.

ஜெர்மனி அணிக்கு எதிராக விளையாடியது தென் அமெரிக்க கண்டத்தின் தலை சிறந்த அணிகளில் ஒன்றுதானா? அதுவும் இன்றைய உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரரான டீகோ மரடோனாவால் பயிற்றுவிக்கப்பட்ட அணிதானா? என்ற சந்தேகங்களை எழுப்பியது. அந்த அளவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஆடியபோல் இருந்தது அர்ஜெண்டினாவின் ஆட்டம்.

ஆட்டம் துவங்கிய 3வது நிமிடத்தில் கிடைத்த ஒரு பெளல் வாய்ப்பை பயன்படுத்தி கோலை நோக்கி பொடோல்ஸ்கி அடித்த பந்தை, எந்த தடையுமின்றி முன்னேறி வந்த லேசாக தலையால் முட்டி கோலிற்குள் தள்ளினார் தாமஸ் முல்லர். அர்ஜெண்டினா டி-க்குள் வந்த பந்தை முன்னால் நின்று தடுக்க ஒரு தடுப்பாட்டக்காரரும் அங்கு இல்லாதது ஆச்சரியம்தான்.

இதன் பிறகு அர்ஜெண்டினாவின் ஆட்டம் சூடு பிடித்தது, ஆனால் அவர்களால் 4 பேர் கொண்ட ஜெர்மன் அணியின் தடுப்பாட்ட அரணை உடைக்க முடியவில்லை. பந்து ஜெர்மனியின் டி-யை நெருங்கியபோதெல்லாம், 6,7 ஜெர்மனி வீரர்கள் கோட்டை போல் நின்று காத்தனர்.

ஆனால் ஜெர்மனியின் முன்கள வீரர்கள் பொடோல்ஸ்கி, முல்லர், மிராஸ்லாவ் குளோஸ் ஆகியோர் நினைத்தபோதெல்லாம் அர்ஜெண்டினாவின் டிக்குள் புகுந்த தாக்கினர். 23வது நிமிடத்தில் டிக்குள் அடிக்கப்பட்ட பந்தை கோலை நோக்கி தட்டினார் குளோஸ், ஆனால் பந்து கோலிற்கு மேல் பறந்தது.

அடுத்த 10 நிமிடங்களுக்கு மெஸ்ஸி, டீவெஸ், ஹிகுவெய்ன் ஆகியோர் ஜெர்மனி கோலைத் தாக்கினர், ஆனால், எதுவும் கோலாகவில்லை. 34வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை கோலாக்கத் தவறினார் டீவெஸ்.

இடைவேளைக்குப் பிறகு அர்ஜெண்டினாவின் ஆட்டத்தில் சூடு பிடிக்கும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. 53வது நிமிடத்தில் பந்துடன் டிக்குள் புகுந்த டீவெஸ் கோலை நோக்கி அடித்த பந்து ஜெர்மனி தடுப்பாட்டக்காரர் முகத்தில் பட்டு வெளியில் பறந்தது. அது நிகழாமல் இருந்திருந்தால் அர்ஜெண்டினா நிச்சயம் சமன் செய்திருக்கும்.

இதனைத் தொடர்ந்து 57வது நிமிடத்தில் பொடோல்ஸ்கி கொடுத்த அருமையான கிராஸை கோலி இடைமறித்து தடுத்துப் பிடித்தார். ஆனால் அர்ஜெண்டினா கோலை நோக்கி அடுத்தடுத்து படையெடுத்து தாக்குதல் நடத்தியது ஜெர்மனி. அதற்கு 66வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.

பல தடுப்பாட்டக்காரர்களை கடந்து டி-யை நெருங்கிய பொடோல்ஸ்கி, பந்தை டிக்குள் தட்டிவிட அது அர்ஜெண்டினா தடுப்பாட்டக்காரருக்கும் கோலிக்கும் அகப்படாமல் கடக்க, அதனை சிரமமின்றி கோலிற்குள் தள்ளினார் குளோஸ்.

அடுத்த 8வது நிமிடத்தில் மந்தையாக வந்து டி-க்குள் புகுந்து தாக்கிய ஜெர்மனி அணியினர் மூன்றாவது கோலைப் போட்டனர். ஆர்னி பிரடெரிக் கோலைப் போட்டார். ஆட்டம் முடிய ஒரு நிமிடமே இருந்தபோது நடுக்களத்தில் இருந்து பந்தைப் பெற்றுக் கொண்டு வந்த குளோஸ் 4வது கோலை அடித்தார்.

4-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி தோற்கடிக்கப்பட்டது என்பது அந்த அணி ஆடிய ஆட்டத்திற்கு கிடைத்த முடிவு என்றாலும், டீகோ மரடோனா என்கிற ஒரு மாபெரும் கால்பந்தாட்ட வீரனால் பயிற்றுவிக்கப்பட்ட அணி, இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது சகிக்க முடியாததான்.

No comments:

Post a Comment