Sunday, July 4, 2010

ஐ.நா விசாரணைக்குழு விவகாரத்தில் எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் இருதரப்பு மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் நடவடிக்ககைகள் மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட குழு தொடர்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைருமான விமல் வீரவன்ச அவர்களும் தமது தமது நிலைப்பாட்டினை வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து அவர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளபோதும் தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறான அழுத்தங்கள் ஏற்பட்டாலும் நிலைப்பாட்டில் மாறுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கான முடிவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுக்கும்வரை இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை சுற்றிவளைக்குமாறும், அங்குள்ள உத்தியோகர்த்தர்களை தடுத்து வைக்குமாறும் பொதுமக்களிடம் கடந்த வாரம் விமல் வீரவன்ஸ கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்பான நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் அரசாங்க அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பில் அழுத்தங்கள் எதுவும் பிரயோகிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் 3 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பதானது, இலங்கைத் தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் ஆரம்பகட்ட நடவடிக்கை என்றும் விமல் வீரவன்ஸ இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை தொடர்பாக ஆலோசனைகளை பெறவே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்‐கீ‐மூன் இந்த நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் நாட்டின் இறையாண்மைக்கு அழுத்தங்கள் ஏற்படும் என்பதால், அரசாங்கம் அரசாங்கம் இக்குழுவை அங்கீகரிக்கப்போவதில்லை எனவும் அவர்களை நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்போவதில்லை எனவும் அறிவித்திருந்தது.

நிபுணர்கள் குழுவிற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காததால், சர்வதேச அழுத்தங்கள் ஏற்படாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் அணிசேரா நாடுகளும் நிபுணர்கள் குழுவை நிராகரித்துள்ளதன் மூலம் இது தெளிவாகியுள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போரில் ஏற்பட்ட சம்பவங்களை அறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதால், நிபுணர்கள் குழு அவசியமற்றது எனவும் அந்த பேச்சாளர் கூறியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஐநா செயலாளரின் நிபுணர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

No comments:

Post a Comment