ஆர்ப்பாட்டங்களுக்கு ஐ.நா. கண்டனம். ஊழியர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்.
இலங்கையில் இடம்பெற்றதாக குற்றஞ்சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீ முனுக்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட குழுவை கலைக்குமாறு வேண்டி தேசிய விடுதலை முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ச தலைமையிலான குழுவினர் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர்.
ஐ.நா.அலுவலகத்திற்கு வெளியே மேடையொன்றை அமைத்த ஆர்பாட்டக்காரர்கள் ஐ.நா. அதிகாரிகள் கட்டிடத்திற்குள் செல்வதையும் வெளியேறுவதையும் முடக்கியதுடன் விசாரணைக்குழு கலைக்கப்டும் என்ற உறுதி தமக்கு கிடைக்கும் வரை அங்கிருந்து அகலப்போவதில்லை என்ற நிபந்தனையை விதித்து பான் கீ மூனுக்கு எதிராக பலத்து கோஷமிட்டனர். பான் கீ முன் வெள்ளை புலி என்றனர். அவரின் உருவப் பொம்மைக்கு செருப்புக்களால் அடித்தனர். அதற்கு நெருப்பூட்டினர்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பான தனது நிபுணர் குழுவை கலைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கிருந்து அகலப்போவதில்லை என அமைச்சர் விமல் வீரவன்ஸ செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
இந்நிலையில் பொலிஸார் ஆர்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்டபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதில் பொலிஸ்காரர் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர் வீரவன்ச பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு பொலிஸாரை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் றொமேஸ் செயசிங்க ஸ்தலத்திற்கு விரைந்து ஐ.நா அதிகாரிகள் மற்றும் வீரவன்ச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நாடாத்தியுள்ளார்.
பொலிஸாரின் பாதுகாப்புடன் ஐ.நா ஊழியர்கள் கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நான்கு ஐரோப்பிய ஊழியர்கள் நான்கு வான்வண்டிகளில் பலத்த பாதுகாப்புடன் வெளியே கொண்டுசெல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
கொழும்பில் ஐ.நா மன்ற அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட முற்றுகை ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு தனது கடுமையான ஆட்சேபங்களைத் தெரிவித்திருப்பதாக ஐ.நா மன்றத் தலைமைச் செயலருக்காகப் பேசவல்ல அதிகாரி பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய ஹக், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த இருக்கும் ஜனநாயக உரிமையை மதிக்கும் அதே நேரத்தில், ஐ.நா மன்றப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியாமல் தடுக்கப்பட்டிருப்பது, இலங்கையில் ஐ.நா மன்றம் அன்றாடம் செய்து வரும் மக்களுக்கு தேவையான முக்கியமான பணிகளுக்கு இடைஞ்சல் தரும் செயலாகும் எனக் கூறியுள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்திருப்பதால், இது குறித்து அரசுக்கு ஆட்சேபங்களை தாங்கள் தெரியப்படுத்தியிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்,
மேற்படி ஆலோசனை குழு இரு தரப்பு குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணை செய்யும் என தெரிவித்துள்ளது. அத்துடன் அதன் செயற்பாடு எவ்வளவு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது கேள்விக்குறியாகும்.
இவ்விசாரணைக்குழுவினை குறிப்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் புலம்பெயர் புலிகள் தமது பிரச்சாரங்களுக்காக பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. அரசாங்கம் புலிகளால் அச்சுறுத்தல் இல்லாது போனாலும் சர்வதேச சமுகத்தால் புலிகளை அழித்தமைக்காக தமக்கு அச்சுறுத்தல் உண்டு என சிங்கள சமூகத்தின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள முனைகின்றது. மறுபுறத்தில் புலிகள் ஐ.நா மேற்கொள்ளும் விசாரணைகள் தமக்கு சாதகமாக அமையும் என மக்களை மேலும் மந்தைகளாக்க முற்படுகின்றனர். இவ்விடத்தில் ஐ. நா இருதரப்பு குற்றங்கள் தொடர்பாகவும் தேடுதல் நாடாத்தும் என் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்ட வேண்டும்.
பாராளுமன்றில் வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றது. வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை மிகவும் உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு அங்கர் பால் மா ஒன்றின் விலை 48 ரூபாய்களால் உயர்ந்துள்ளது. மக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் மக்களின் சிந்தனையை திசை திருப்புவதற்கான மிகவும் திட்டமிட்ட நாடகம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment