Tuesday, July 27, 2010

ஐ.தே.கட்சியினுள் ஐக்கியம் வேண்டும் என தீக்குளித்த நபர் மரணம்.

ஐக்கிய தேசிய கட்சினுள் ஏற்பட்டுள்ள பிளவுகளால் மனமுடைந்த கட்சியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் நேற்று கட்சியின் தலைமைக் காரியாலயமான ஸ்ரீகொத்தாவுக்கு முன்னால் தன்னைத்தானே தீ மூட்டிக்கொண்டார். நேற்று உடனடியாக களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

களனியைச் சேர்ந்த ரியன்ஸி அல்கம எனப்படும் ஊயிரிழந்த நபர் நேற்று சிறிகொத்தவிற்கு சென்று கட்சியின் ஊடகச் செயலாளரைச் சந்தித்து கட்சியினுள் ஏற்பட்டுள்ள பிளவுகள் தனக்கு ஏற்படுத்தியுள்ள வேதனையை தெரிவித்துள்ளதுடன் இதுவே கட்சி உறுப்பினர்களை தான் சந்திக்கும் இறுதி தடவையாக அமையும் எனக் கூறிவிட்டுச் சென்று கட்சியின் தலைமைப்பீடத்திற்கு முன்னே தனது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் டட்லி சேனநாயக்க காலத்திலிருந்தே கட்சியின் தீவிர ஆதரவாளர் என தெரிவித்துள்ள கட்சியின் உபதலைவரான கரு ஜெயசூரியா: ரியன்சி கட்சியினுள் ஏற்பட்டுள்ள பிணக்கினை தீர்ப்பதற்கு அரும்பாடுபட்டவர் என உறுதிப்படுத்தியுள்ளார்.

ரியன்சி நேற்று காலையில் தன்னை தொடர்பு கொண்டு கட்சிக்குள் நிலவுகின்ற பூசல்கள் குறித்துக் கவலை தெரிவித்ததாகவும் பின்னர் மாலையில் மீண்டும் தொடர்பு கொண்டு அரசியலிலிருந்து விடுபடப்போவதாகவும் தெரிவித்ததாக கூறும் கரு ஜயசூரிய தடைகளைத் தாண்டி கட்சியினுள் ஐக்கியம் கொண்டுவரப்படவேண்டும் என்பதே ரியன்சியின் இறுதி ஆசையாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரியன்சி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான புலிகளின் குண்டுவெடிப்பில் உயிரிழந்த மேஜர் ஜெனரல் லக்கி அல்கமவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment