அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் தொலைக்காட்சி மையம் மீது குண்டுத்தாக்குதல்.
கொழும்பு யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின்மீது இன்று அதிகாலை 1.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. முகமூடிகள் அணிந்து ஆயுதங்கள் தாங்கிச் சென்ற சுமார் 12 பேர் கொண்ட குழுவொன்று அதியுயர் பாதுகாப்பு வலத்தில் இத்தாக்குதலை நடாத்தி முடித்துள்ளது. இரு வாகனங்களில் தாக்குதலுக்குச் சென்ற குழு காரியாலயக் காவலாளிகளைத் தாக்கி காயப்படுத்தி உள்நுழைந்து அலுவலகத்திலிருந்த கணனிகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தையும் தாக்கி அழித்துவிட்டு பெற்றோல் குண்டுகளை வீசி கட்டிடத்திற்கு சேதம் எற்படுத்திச் சென்றுள்ளனர்.
சுமார் 10 தொடக்கம் 12 நிமிடங்கள் இத்தாக்குதல் நீடித்ததாக நிறுவனத்தின் செய்திப்பிரிவுக்கான இயக்குனர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தாக்குதல்தாரிகளால் காயப்படுத்தப்பட்ட அலுவலக ஊழியர் ஒருவர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் காவலாளிகள் இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் நிறுவனம் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உடனடியாக சேவையினை ஆரம்பிக்க முடியாதெனவும் , மிகவிரைவில் தமது சேவைகள் வழமைக்கு திரும்புமெனவும் தெரிவித்துள்ளார்.
தாக்குலுக்கு உள்ளாகியுள்ள சியத்த ஊடக நிறுவனத்தின் உரிமையாளர் ரொஸாந்த காரியபெரும , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய நட்பினை கொண்டிருந்தவர் எனவும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவுடன் முரண்பட்டுக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளரான ஜெனரல் பொன்சேகாவிற்கான தேர்தல் பிரச்சாரங்களுக்கான பிரதான நிதிஉதவியாளராக இருந்துள்ளார். இவரது சகோதரன் பிரியந்த காரியப்பெரும ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்துள்ளதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜெனரல் பொன்சேகாவிற்கான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அவர் ஜெனரல் பொன்சேகா தோல்வியடைந்தயடுத்து அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலினால் நாட்டை விட்டு ஒடி கனடாவில் தங்கியுள்ளார் என ரொஸாந்த காரியப்பெருமவிற்கு நெருக்கமான வட்டாரத்தினர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தனர்:
ஊடக சுதந்திரத்தினை உறிதிப்படுத்தும் வகையில் ஊடக அதிகார சபை ஒன்று நிறுவப்படவுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அதியுயர் பாதுகாப்பு வலயித்திலிருந்த ஊடகம் ஒன்றின் மீது தாக்குதல் நாடத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment