Wednesday, July 28, 2010

ஒலுவில் பிரசேத்தில் புதிய கடற்படை முகாம் : முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு.

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், உள்ளூர் மீனவர்களும் தமது எதி்ர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்ஏற்கெனவே தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தற்போது துறைமுகமொன்றும் அமைக்கப்பட்டு வருவதால் இப்பகுதி கேந்திர முக்கியத்துவம் பெற்ற பிரதேசமாக கருதப்படுகின்றது.

சுனாமியினால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட பாடசாலை கட்டிடமொன்றிலேயே கடற் படையினர் முகாமிட்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது.

ஆனால் இப்பாடசாலைக் கட்டிடத்தில் மதரசாவும், பாலர் பாடசாலையொன்றும் நடை பெற்று வந்ததாகக் கூறும் ஒலுவில் பெரிய பள்ளிவாசல் தலைவரான அபுபக்கர் லெப்பை இஸ்மாயில் கடற் படையினர் தங்கள் பகுதியில் முகாமிட்டிருப்பது பிரதேசத்தின் இயல்பு நிலைக்கு தடையாக அமையலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.

மீனவர்கள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டு சுதந்திரமாக தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படக்கூடிய சூழ்நிலை தென்படுவதாகவும் கூறுகின்றார்

ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடித மூலம் அறிவித்துள்ள போதிலும் எவ்வித சாதகமான பதிலும் இது வரை கிடைக்கவில்லை என்கின்றார்.

கடற்படைத் தளபதி இம்முகாமிற்கு வந்திருந்த போது அவரை சந்தித்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறும் பள்ளிவாசல் செயலாளரான அப்துல் ரகீம் கடற்படைத் தளபதி தங்கள் கோரிக்கையை நிராகரித்து அளித்த பதில் ஏமாற்றத்தையும் கவலையையும் தந்ததாக குறிப்பிடுகின்றார்.

ஏற்கெனவே கடற்படை முகாம்கள் அமைந்துள்ள கிராமங்களில் அவ்வப்போது மீனவர்களுக்கும், கடற் படையினருக்குமிடையில் எற்படுகின்ற மோதல்களும் முரண்பாடுகளும் இந்த பிரதேசத்திலு்ம் எதிர்காலத்தில் ஏற்படக் கூடும் என்ற அச்சம் உள்ளுர் மீனவர்களிடம் பொதுவாக நிலவுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com