தமிழ் மக்களுக்கு எது தேவையானது என்பதை இந்தியா பரிசீலிக்கும். ரின்ஏ க்கு இந்தியா
இந்தியா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தமிழ் மக்களின் தேவைகள் என்ன என்பதை பரிசீலித்து அதற்கு ஏற்றவாறு இந்தியா செயற்படும் எனவும் தமிழ் அரசியல்வாதிகளின் தேவைகள் யாவும் தமிழ் மக்களின் தேவைகளாகாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை வடக்குப் பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து இலங்கையை வற்புறுத்துவது குறித்து பரிசீலிக்க முடியும் என டெல்லி சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் இந்தியா கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உட்பட பலரை சந்தித்து பேசியபோது, இலங்கையில் பல ஆண்டுகளாக இருந்து வரும் இனைப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என தமது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பொதுமக்களின் நிலங்கள் இராணுவத் தேவைக்காக எடுக்கப்படுவதை தடுக்க இந்தியா உதவ வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு , இதற்கான உத்தரவாதத்தை இந்தியா தர இயலாது எனவும், எனினும் அதை தாங்கள் பரிசீலிப்பதாகவும் இந்திய அமைச்சர்கள் தம்மிடம் கூறியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.
மக்களின் மனிதாபிமானத் தேவைகளை இந்தியா கவனிக்கும் என இந்தியத் தரப்பில் கூறப்பட்டதாகவும், அதே நேரம் வடபகுதியில் இந்தியா முன்னெடுக்கவுள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்தியா கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, தமிழ் மக்களுக்கு எது நியாயமானது என்பது தொடர்பாக தாங்கள் பரிசீலித்து வருவதாகவும், இந்திய அமைசசர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment