Sunday, July 25, 2010

புகலிடம் கோரி வரும் இலங்கையருக்கு ஆதரவு வழங்காதீர்.

இலங்கையிலிருந்து அகதிகள் என கூறிக்கொண்டு வருபவர்களின் புகலிடக் கோரிக்கையை ஏற்கின்றமை சட்டத்துக்கு புறம்பான ஆட்கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதாக அமையும் என்று சர்வதேச சமுதாயத்தை அரசு எச்சரித்துள்ளது.

இதனால் எந்த ஒரு நாடும் இலங்கையில் இருந்து வருபவர்களின் புகலிடக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவே கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளது. வியட்நாமில் இடம்பெற்ற ஆசியான் பிராந்திய நாடுகளுக்கான 17 ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட வெளி விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கிதாஞ்சன குணவர்தன இவ்வாறு அங்கு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,

சிறு படகுகளில் ஆட்களையும் பொருட்களை கடத்தி வருபவர்களையும் , சட்டத்துக்கு புறம்பாக கடல்வழியே ஊடுருவுபவர்களையும் கண்காணிக்க- தடுத்து நிறுத்த இலங்கை அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. அனைத்து நாடுகளும் அவரவர் எல்லைக்குள் உள்ள கடல் பகுதியை மாத்திரம் கண்காணிப்பது போதாது . சர்வதேச கடல் பகுதிகளும் கண்காணிக்க வேண்டும்.

இல்லாவிடால் தற்போதைய நவீன தொழில்நுட்ப உதவியுடன் தீவிரவாதிகள் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடும் வாய்ப்பு உருவாகி விடும். இலங்கையில் இருந்து அகதிகள் என்று சொல்லிக்கொண்டு வருகின்றவர்களின் புகலிடக் கோரிக்கையை சர்வதேச நாடுகள் ஏற்கவே கூடாது. சட்டத்துக்கு புறம்பான கடத்தல், சட்ட விரோத வணிகம், தீவிரவாதம் ஆகியவற்றை ஊக்குவிப்பதாக அது அமைந்து விடும். இலங்கையில் இருந்து வருபவர்களின் புகலிடக் கோரிக்கைக்கு எந்த நாடும் செவிசாய்க்கவே கூடாது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com