வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்கள் வெளியேறும் அபாயம்
வன்னிப் பகுதியில் தங்கி, சேவையாற்றும் சில சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அரசாங்கம் மேலும் இறுக்கியுள்ளதால், அவை அங்கிருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வன்னிக்குள் சென்று சேவையாற்றுவது என்றால் பசில் ராஜபக்சவின் தலைமையில் இயங்கும் ஜனாதிபதியின் சிறப்பு விசேட ஆணைக்குழுவிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதோடு, பாதுகாப்பு அமைச்சத்தின் அனுமதியைப் பெறுவதும் அவசியமாகும். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்ற விரும்பினால் இந்த அனுமதியை மாதாமாதம் புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்னால் அமைச்சர் விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததன் பின்னரே இவ்வாறான மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு சாரா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் சிறப்பு விசேட ஆணைக்குழுவிடம் அனுமதியைப் பெறுவதென்பது காலந்தாழ்த்துகின்ற ஒரு கடினமான செயல்முறை எனக் கூறுகின்ற தொண்டு நிறுவனங்கள், இந்த அனுமதியைப் பெறுவதற்குச் சில வேளைகளில் மாதக்கணக்கிலும் செல்லும் எனத் தெரிவிக்கின்றன. இந்த அனுமதியைப் பெற்றால் மட்டுமே பாதுகாப்பு அமைச்சத்தின் அனுமதியை மாதாமாதம் புதுப்பிக்க முடியும்.
மேலும், ஒவ்வொரு மாதமும் குறித்த தொண்டு நிறுவனத்தில் புதிதாகப் பணியாற்றுபவர்களின் பெயர்களைச் சமர்ப்பிப்பதும் பெருஞ்சிக்கலான செயற்பாடாக உள்ளது எனக் கூறுகின்ற நிறுவனங்கள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்ற பாதுகாப்பு அமைச்சத்தின் அனுமதி அவசியமற்றது என்றும், மக்களுக்குக் கிடைக்கும் உதவிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதாகவும் தெரிவிக்கின்றன.
மீளக்குடியேறிய மக்களுக்கான சகல உதவிகளையும் அரசாங்கம் வழங்க முற்படுவதில்லை என்பதால் அங்கு தொண்டு நிறுவனங்களின் சேவைகள் மிக அவசியம் என்றும் தெரிவிக்கின்றன.
வன்னியில் உலர் உணவு வழங்குவதற்கு உலக உணவுத் திட்டத்துக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. யூ.என்.எச்.சி.ஆர் மற்றும் யுனொப் ஆகியவை இராணுவப் பாதுகாப்புடன் செல்லும் வாகனங்களில் மட்டுமே தமது பொருட்களைக் கொண்டு செல்லலாம் எனக் கட்டுப்ப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் அனைத்தும் ஒரே நாளில் வன்னிக்குச் செல்ல வேண்டும் என்பதோடு, ஒரு சில யுனொப் பணியாளர்கள் மட்டுமே வன்னியில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யுனிசெஃப் அமைப்பு வன்னிக்குச் செல்வதற்கு இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை. கெயர், பி.ஆர்.சி, என்.ஆர்.சி, சேவா லங்கா, ஆர்.டி.எஸ் மற்றும் ஸோவா போன்ற ஒரு சில நிறுவனங்களே அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வளவு கட்டுப்பாடுகளின் கீழ் பணியாற்ற முடியாத நிலையில் தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment