இலங்கைத் தமிழர்களை தொடர்ந்தும் அகதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. UNHCR
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றகரமான சூழ்நிலை மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கொண்டு நோக்கும் போது இலங்கைத் தமிழர்களை அகதிகளாக கருத முடியாது என ஐநா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச அகதிகள் தொடர்பான புதிய விதிமுறைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைமைகள் சுமூகமடைந்து வருவதாகவும், இதனால் வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் இலங்கையர்களுக்கு உடனடி அகதி அந்தஸ்து வழங்கப்பட முடியாதென சுட்டிக்காட்டியுள்ளது. தனிப்பட்ட நபர்களின் நிலைமை மற்றும் பின்னணியை கருத்திற் கொண்டு எதிர்வரும் காலத்தில் புகலிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இலங்கையில் பாதுகாப்பு மற்றும் மீள் குடியேற்ற விடயங்களில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றபோதும் , முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்கள் சிலர் , தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுவோர் மற்றும் ஊடகவியலாளர்கள் , சில தனிநபர்களுக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் ஐ.நா வின் ஆகதிகளுக்கான உயரிஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
புகலிடம் கோரி நாட்டுக்கு வரும் இலங்கையர், ஆப்கானிஸ்தானியர் ஆகியோருக்கு அரசியல் தஞ்சம் வழங்கும் நடவடிக்கைகளை கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி முதலான மூன்று மாதங்களுக்கு அவுஸ்திரேலியா இடைநிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் இந்த அகதிகளுக்கு புகலிடம் வழங்கும் நடவடிக்கைகளை தொடர்வதா, இல்லையா, என்கிற முடிவை எதிர்வரும் 08 ஆம் திகதி அவுஸ்திரேலியா அரசு அறிவிக்கவுள்ள நிலையில் இன்று ஐநா இலங்கைத் தமிழர்கள் தொடர்பான சில விடயங்களை முன்வைத்துள்ளது.
ஐ.நா வின் இவ்வறிவித்தலை சாதகமாக பயன்படுத்தி அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கைத் தமிழர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பதிய வழிகாட்டிகளின் அடிப்படையில் இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
குறிப்பாக இலங்கையில் தற்போது சுமூகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தொடர்ந்தும் வெளிநாடுளில் இலங்கையர்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இலங்கை அகதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் கில்லார்ட் உள்ளிட்ட சிரேஸ்ட அமைச்சர்கள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
...............................
0 comments :
Post a Comment